"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Friday, April 29, 2011

அறிவோர் கூடல் - பேராசிரியர் ஜெ.அரங்கராஜ் உரை

கடந்த 24.04.2011 ஞாயிறு மாலை 3.30 மணிக்கு பருத்தித்துறை அறிவோர் கூடலில் ‘தமிழர் தொன்மை’ என்னும் பொருளில் பேராசிரியர் ஜெ.அரங்கராஜ் அவர்கள் உரை நிகழ்த்தினார். சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆய்வாளராகப் பணிபுரியும் பேராசிரியர் அவர்களின் உரை; வரலாற்று ஆய்வு, தொல்லியல் ஆய்வு என்பவற்றின் அடிப்படையில் இதுவரை வெளிவந்த ஆதாரங்களை மேற்கோள் காட்டி ‘சிந்துவெளிப் பிரதேசத்திலிருந்து தமிழர்கள் வந்தார்கள்’ என்பதைத் தொடக்கவுரையாகக் கொண்டு தனது உரையை நிகழ்த்தினார்.
இலக்கியம், கலை, பண்பாடு, விளையாட்டு, கல்வெட்டு, என்றவாறு பல உபபிரிவுகளில் தனது உரையை நகர்த்திச் சென்ற ஆய்வாளர்; மேலும் புத்தகத்தைப் பாதுகாப்பது, ஓலைச் சுவடிகள் வாசிப்பு - எழுத்து, தமிழியல் ஆய்வுகள், இன்றைய நிலையில் ஆய்வு மாணவர்கள் செய்யவேண்டியவை, அவர்களை வழிப்படுத்த பல்கலைக்கழகங்களில் உள்ள வசதிவாய்ப்புக்கள் ,ஆகியன குறித்தும் மேலதிகமாக கலந்துரையாடலில் விரிவாகக் குறிப்பிட்டார்.

மேற்படி நிகழ்வில் தொடக்கவுரையை இலக்கியச் சோலை து. குலசிங்கம், ஆய்வாளர் பற்றிய அறிமுகவுரை பா.துவாரகன், நன்றியுரை குப்பிழான் ஐ.சண்முகன் ஆகியோர் நிகழ்த்தினர்.


தமிழ் ஆய்வு மற்றும் மரபுவழி இலக்கியம் குறித்த மிகப் பயனுள்ள இலக்கிய நிகழ்வாக மேற்படி பேராசிரியர் அரங்கராஜ் அவர்களின் உரை அமைந்திருந்தது.

பதிவும் படங்களும் - சு. குணேஸ்வரன்

No comments:

Post a Comment