"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Sunday, January 1, 2012

அறிவோர் ஒன்றுகூடல் - இரண்டு உரைகள்




பருத்தித்துறை அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வு 01.01.2012 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் து. குலசிங்கம் அவர்களின் தொடக்கவுரையைத் தொடர்ந்து இரண்டு உரைகள் நிகழ்த்தப்பட்டன.

முதலாவதாக அறிவோர் கூடல் நண்பர்களில் ஒருவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளராகக் கடமையாற்றியவருமான பொ. கமலரூபனின் 11 வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு நினைவுரை இடம்பெற்றது.

கமலரூபனின் இலக்கிய நேசிப்பு,தீவிர வாசிப்பு, அவரது ஆய்வு ஈடுபாடு, அவர் எழுதிய கட்டுரைகள் மற்றும் ஆய்வுகள், ஆகியன பற்றி சு. குணேஸ்வரன் உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து “கவிதையும் சமூகமும் - ஒரு வரலாற்று நோக்கு” என்ற தலைப்பில் திரு சி. வன்னியகுலம் உரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை தமிழ்க்கவிதையின் போக்குப் பற்றியும் அதற்கு இணையாக இருந்த சமூக அரசியல் நிலைகள் பற்றியும் எடுத்துரைத்தார். உழைக்கும் மக்களின் பாடல்கள் சங்க இலக்கியம் முதல் தவிர்க்கப்பட்டமை, ஆளும் வர்க்கத்திற்கு சார்பாகவே இலக்கியங்கள் படைக்கப்பட்டமை, உருவ உள்ளடக்க மாற்றம், தற்காலக் கவிதைகளில் இருக்கும் போதாமைகள் ,என்பன பற்றி உரையாற்றினார்.

உரையினைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற்றது. ஆண்டாளின் பாடல்கள் பெண்கவிதைப் போக்கில் உடைப்பை ஏற்படுத்தியமை, தன்னுணர்ச்சிப் பாடல்கள், பெண்மொழி, தற்காலக் கவிதைகளின் போக்கு, ஆகியன பற்றியெல்லாம் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நன்றியுரையை சி. சின்னராஜன் நிகழ்த்தினார்.

பதிவு – சு. குணேஸ்வரன்
படங்கள் – கமலசுதர்சன்/ குணேஸ்வரன்