Saturday, November 13, 2010
மறுபாதி சஞ்சிகை வெளியீடும் நூல் கண்காட்சியும்
பதிவும் படங்களும் : சு. குணேஸ்வரன்
‘மறுபாதி’ கவிதைக்கான காலாண்டிதழின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வும் தேர்ந்த நூல்களின் கண்காட்சியும் 13.11.2010 அன்று யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் BOOK LAB நிறுவனத்தினரின் தேர்ந்த நூல்களின் கண்காட்சி அன்றைய தினம் காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது.
நூல் வெளியீடு மாலை 3.00 மணிக்கு அ. கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் வெளியீட்டுரையை கலைமுகம் சஞ்சிகை பொறுப்பாசிரியர் கி. செல்மர் எமில் நிகழ்த்தினார்.
நூலை எழுத்தாளர் ஐ. சாந்தன் வெளியிட்டு வைக்க நடராசா ஆனந்தன் பெற்றுக் கொண்டார். சஞ்சிகை பற்றிய ஆய்வுரையினை எழுத்தாளர் சாந்தன் நிகழ்த்தினார். பதிலுரையை சித்தாந்தன் நிகழ்த்தினார். சி. ரமேஸ் நன்றியுரையை நிகழ்த்தினார்.
மறுபாதியின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழாக வெளிவந்துள்ள இவ்விதழ் மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்கான இதழாக மிளிர்கின்றது. இதில் பேராசிரியர் சி. சிவசேகரத்துடனான மொழிபெயர்ப்புக் கவிதைகள் பற்றி சி. ரமேஸின் நேர்காணலும், 20 ற்கு மேற்பட்ட வேற்றுமொழிப் படைப்பாளிகளின் மொழிபெயர்ப்புக் கவிதைகளும் உள்ளன.
கவிதைகளை எம். ரிஷான் செரீப், ரவிக்குமார், மு. பொன்னம்பலம், எம்.ஏ.நுஹ்மான், வி.உதயகுமார், சோ. பத்மநாதன், ந. சத்தியபாலன், பஹீமா ஜஹான், கஞ்சாக் கறுப்புக் கள்ளன், வைரமுத்து சுந்தரேசன், சு. வில்வரத்தினம், தி.நிஷாங்கன், சங்கரசெல்வி, சத்தியதாசன், இ.ரமணன், விமல் சுவாமிநாதன், சி.ஜெயசங்கர் ஆகியோர் மொழிபெயர்த்திருந்தனர்.
மகேந்திரன் திருவரங்கன், யமுனா ராஜேந்திரன், செ.யோகராசா, பா.துவாரகன், ஜெயமோகன், கருணாகரன், ந.சத்தியபாலன் ஆகியோரின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் பற்றிய கட்டுரைகளும் திவ்வியாவின் பத்தியும் உள்ளடங்கியுள்ளன.
marupaathy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு இதழைப் பெற்றுக் கொள்ளமுடியும்.
இரண்டு நிகழ்வுகளின் ஒளிப்படங்களையும் காணலாம்.
Sunday, November 7, 2010
சி. உதயகுமாரின் ‘செந்நீரும் கண்ணீரும்’
- சிறுகதைத் தொகுதி வெளியீடு
பதிவும் படங்களும் :- சு. குணேஸ்வரன்
சமரபாகு சீனா உதயகுமாரின் ‘செந்நீரும் கண்ணீரும்’ என்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா 06.11.2010 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது. கொற்றாவத்தை செட்டிதறை சித்திவிநாயகர் கல்யாண மண்டபத்தில் கொற்றை பி. கிருஷ்ணானந்தன் தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. வரவேற்புரையை ஆசிரியை தெ. றஜிதா நிகழ்த்தினார்.
நூல் வெளியீட்டுரையை பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் நிகழ்த்தினார். நூலின் முதற்பிரதியை பேராசிரியரிடமிருந்து U.N.H.C.R Field Officer சி. இன்பரூபன் பெற்றுக்கொண்டார்.
நூலின் ஆய்வுரைகளை யாழ் ஸ்கந்தவரோதய கல்லூரி அதிபர் செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் அவர்களும்; யாழ் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் இ. இராஜேஸ்கண்ணனும் நிகழ்த்தினர்.
நூலைப் பதிப்பித்த ஐங்கரன் கிராபிக்ஸ் ஐ. குமரனுக்கு நூலாசிரியரின் வேண்டுதலில் பேராசிரியர் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார். நிகழ்வில் ஏற்புரையினையும் நன்றியுரையினையும் நூலாசிரியர் நிகழ்த்தினார். நூல் வெளியீட்டுக்கு மண்டபம் நிறைந்த இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டமை நிறைவாக இருந்தது.
தொடர்பு முகவரி :- சி. உதயகுமார்,
கூனந்தோட்டம்,
சமரபாகு,
வல்வெட்டித்துறை.
Thursday, November 4, 2010
‘அவை’ - இலக்கியக் கலந்துரையாடல்
பதிவும் படங்களும் - சு. குணேஸ்வரன்
‘அவை’ இலக்கிய அமைப்பின் ஏற்பாட்டில் 31.10.2010 ஞாயிறு மாலை 3.30 மணிக்கு இலக்கியக் கலந்துரையாடல் இடம்பெற்றது. நிகழ்வில் தேசிய கலை இலக்கியப் பேரவைச் செயலாளர் சோ. தேவராஜா உரை நிகழ்த்தினார். மேற்படி நிகழ்வு எழுத்தாளர் தெணியான் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. அறிமுகவுரையை தாயகம் ஆசிரியர் க. தணிகாசலம் அவர்கள் நிகழ்த்தினார்.
‘புத்தகப் பண்பாடு’ பற்றி உரையாற்றிய சோ. தேவராஜா, மிகக் காத்திரமான விடயங்களை நாம் வாசிப்பினூடாகவே அறிந்து கொள்ள முடிகிறது. புத்தகப் பண்பாடு என்பது ஒவ்வொரு வீட்டிலும் பேணப்படவேண்டிய ஒன்று. இன்றைய காலத்தில் வாசிப்பின் தேவையை ஊக்கப்படுத்தும் முகமாக தேசிய கலை இலக்கியப் பேரவையினர் ஊடாக கிராமத்திற்கு 10 பேர் என்ற வகையில் நிகழ்வினை முன்னெடுத்து வருவதாகவும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் எடுத்துரைத்துரைத்தார்.
இந்நிகழ்வில் பலர் தமது கருத்துக்களை முன்வைத்தனர். அக்கருத்துக்களில் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படவேண்டிய நிலை, சிறுவருக்கு ஏற்ற கதைகளை தேடிக்கொடுக்க வேண்டிய தேவை, ஆசிரியர்கள் மட்டத்தில் துறை சார்ந்த வாசிப்புப் போதாமை, ஊர்கள் தோறும் வாசிப்பையும் புத்தகப் பண்பாட்டையும் முன்னெடுக்க வேண்டிய தேவை, ஆகியன குறித்து கலந்துரையாடலில் சிலாகிக்கப்பட்டன.
நிகழ்வில் நன்றிரையை கலாநிதி த. கலாமணி அவர்கள் நிகழ்த்தினார்.
நிகழ்வின் ஒளிப்படங்கள்
Monday, November 1, 2010
நிந்தவூர் ஷிப்லி யின் ‘தற்கொலைக் குறிப்பு’
பதிவு – சு. குணேஸ்வரன்
ஒளிப்படங்கள்– ஹரிகரன்
நிந்தவூர் ஷிப்லி யின் ‘தற்கொலைக் குறிப்பு’ என்னும் கவிதை நூலின் அறிமுகவிழா 31.10.2010 ஞாயிறு காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் ப.நோ.கூ. சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கி. விசாகரூபன் அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறீதரன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் நூல் வெளியீட்டுரையை தீபச்செல்வனும், நூல் ஆய்வுரைகளை த. அஜந்தகுமார் மற்றும் துவாரகன் ஆகியோரும் நிகழ்த்தினர். ஏற்புரையையும் நன்றியுரையையும் நூலாசிரியர் நிந்தவூர் ஷிப்லி நிகழ்த்தினார். நிகழ்வினை தெளசீப் அகமட் தொகுத்து வழங்கினார்.
தீபம் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த மேற்படி நிகழ்வின் ஒளிப்படங்கள் சிலவற்றைக் காணலாம்.
தொடர்பு முகவரி :- shiblymis@gmail.com/ shiblyin.blogspot.கம