Monday, August 22, 2011

மீண்டு வந்த நாட்கள் - அறிமுகவிழா



வதிரி சி. ரவீந்திரனின் 'மீண்டு வந்த நாட்கள்' கவிதைத் தொகுதி அறிமுகவிழா 21.08.2011 ஞாயிறு மாலை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு கொழும்பு பல்கலைக்கழக கல்வியியற்றுறை பேராசிரியர் மா. கருணாநிதி அவர்கள் தலைமை வகித்தார். நிகழ்வில் வரவேற்புரை செ. கணேசன், நூல் அறிமுகம் திருமதி எஸ் தேவகௌரி, வாழ்த்துரைகள் பேராசிரியர் சபா ஜெயராசா ,டொமினிக் ஜீவா மற்றும் தி. ஞானசேகரன், கருத்துரை பேராசிரியர் செ.யோகராசா, நயவுரை சிறீஸ்காந்தராசா, தொகுப்புரை மேமன்கவி ஆகியோர் நிகழ்த்தினர்.

ஏற்புரையை நூலாசிரியர் நிகழ்த்தினார். நூலின் முதற்பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொண்டார்.

நிகழ்வில் இருந்து சில படங்கள்
படங்கள் - வதிரி சி. ரவீந்திரனின் முகநூலில் இருந்து










Friday, August 5, 2011

சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்திற்கு கணனி கையளிப்பு நிகழ்வு


சுவிஸ் சூரிச் சிவன்கோவில் சைவத்தமிழ்ச்சங்கத்தின் அனுசரணையுடன் ‘அன்பே சிவம்’ நிறுவனத்தினால் வழங்கப்படும் உதவித்திட்டத்தின் வரிசையில் வவுனியா வடக்கு சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்திற்கு மூன்று கணனித் தொகுதிகள் வழங்கப்பட்டன.

மேற்படி நிகழ்வு 03.08.2011 அன்று வித்தியாலய ஆய்வுகூட மண்டபத்தில் ஆசிரியர் திரு சு. குணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

வித்தியாலய மாணவிகளின் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகிய மேற்படி நிகழ்வில் வரவேற்புரையை செல்வி இ. சர்மிளா நிகழ்த்தினார்.

குணேஸ்வரன் உரையாற்றும்போது “அதிகஷ்டப் பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற எங்கள் வித்தியாலயம் இப்பொழுதுதான் தேவையான வளங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெற்றுக் கொண்டிருக்கிறது. கணனிக்கல்வியின் அவசியம் இன்று எல்லோரும் அறிந்த ஒன்றுதான். எங்கள் பிள்ளைகளுக்கு கணனிக்கல்வியை வழங்க ‘அன்பே சிவம்’ அமைப்பின் உதவி எங்களுக்கு கைகொடுக்கும் என்று நம்புகின்றோம். என்றார்.

‘அன்பே சிவம்’ அமைப்பின் தலைவர் திரு அ.அருளானந்தசோதி ‘அவர்கள் உரையாற்றும்போது; அன்பே சிவம் அமைப்பின் நலன்சார்ந்த உதவிகள் பற்றி எடுத்துக்கூறி, போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளைக் கொண்ட சேமமடு சண்முகானந்தா வித்தியாலத்திற்கு செய்யப்படுகின்ற இந்த உதவி மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை மேலும் முன்னெடுத்துச் சொல்வதற்கு வாய்ப்பாக இருக்கும் என்று கூறினார்.

வித்தியாலய அதிபர் எஸ். சசிகுமார் அவர்கள் தமது ஏற்புரையில் ‘ புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற எங்கள் உறவுகள் தமது செல்வச் செழிப்பின் மீதிப்பணத்தில் இந்த உதவியை செய்கிறார்கள் என்று யாரும் நினைக்கக்கூடாது. அவர்கள் மிகக் கஷ்டப்பட்டு உழைக்கின்ற பணத்தில் இருந்துதான் இந்த உதவிகளைச் செய்து வருகிறார்கள். உறவுகளை இழந்து, அங்கங்களை இழந்து, பல்வேறு பாதிப்புக்களையும் எதிர்கொண்டு திரும்பியிருக்கின்ற குடும்பங்களில்இருந்தான பிள்ளைகள் எங்கள் பாடசாலையில் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ‘அன்பே சிவம்’ செய்திருக்கின்ற இந்தக் கல்விக்கான உதவி எங்கள் பாடசாலைச் சமூகத்தினால் மறக்கமுடியாதது. இந்த உதவிச் செய்திருக்கின்ற சுவிஸ் சூரிச் சிவன்கோவில் சைவத்தமிழ்ச்சங்கத்திற்கும் அன்பேசிவம் நிறுவனத்திற்கும், இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.

தொடர்ந்து கணனிக் கையளிப்பு இடம்பெற்றது. நிகழ்வில் அன்பே சிவம் அமைப்பின் யாழ்ப்பாண திட்ட இணைப்பாளர் திரு கே.குமணன்,தலைவர் திரு அ.அருளானந்தசோதி ஆகியோர் கணனித் தொகுதிகளை சேமமடு சண்முகானந்தா வித்தியாலய அதிபர் திரு எஸ். சசிகுமார் அவர்களிடம் கையளித்தனர். இந்நிகழ்வில் யோசப் யேசுராசா அவர்களும் கலந்து கொண்டார்.

மேற்படி நிகழ்வில் வித்தியாலய அதிபர் ஆசிரியர்களுடன் மாணவர்களின் ஒரு தொகுதியினரும் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியாக நன்றியுரையை செல்வி லோ. கோசனா வழங்கினார்.

பதிவு – சு.குணேஸ்வரன்
படங்கள் -T.உமாசுதன், தியாகேஸ்வரன்

இரண்டாவது இணைப்பு


நிகழ்வின் படங்களில் இருந்து சில...
செல்வி இ. சர்மிளா வரவேற்புரை

ஆசிரியர் சு.குணேஸ்வரன் தலைமையுரை

அன்பே சிவம் தலைவர் திரு அ. அருளானந்தசோதி அவர்கள் உரை

சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலய
அதிபர் எஸ். சசிகுமார் அவர்கள் உரை

கணனித் தொகுதிக் கையளிப்பில்
யோசப் யேசுராசா,குமணன்,அருளானந்தசோதி
ஆகியோருடன் அதிபர் ஆசிரியர்கள்


கணனியுடன்
மாணவர்களும் ஆசிரியர்களும் ஒரு தொகுதியினர்





செல்வி லோ. கோசனா நன்றியுரை