கவிதைத்தொகுதி வெளியீடு
ந. மயூரரூபனின் ‘நீயுருட்டும் சொற்கள்’ என்ற கவிதைநூல் வெளியீட்டு விழா 26.08.2012 நெல்லியடி தடங்கன்புளியடி முருகமூர்த்தி ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வரவேற்புரையை த. அஜந்தகுமாரும், வெளியீட்டுரையை துவாரகனும், விமர்சன உரைகளை சித்தாந்தன் மற்றும் ஈ.குமரன் ஆகியோரும் நிகழ்த்தினர்.
ஏற்புரையை நூலாசிரியர் மயூரரூபன் நிகழ்த்தினார்.
தொகுப்பிலிருந்து ஒரு கவிதை
இக்குழந்தை
நிலத்தை மிதிக்கும் இருள்தான்
இவளது கூடாரத்தையும்
தன்னிடுப்பில் சொருகியிருக்கிறது.
ஒளித்துண்டுகளைப்
பொறுக்குகிறது இக்குழந்தை.
மின்மினிகளையும்
கைகளில் பொத்தி
தன் வீட்டுள் எறிகிறது.
ஒளித்துண்டுகளும் மின்மினிகளும்
ஈரங்குழைந்த
கூடாரமண்ணுள் விழுகின்றன.
குழந்தையை விளையாடும்
பசியின் முளைகள்
மின்னுமவற்றைக் குத்துகின்றன.
குழந்தையின் கதகதப்பின் எச்சம் மட்டுமே
முளைகளில்
துடித்தபடியிருக்கிறது.
பயந்தோடுமந்த
ஒளிப்புள்ளிகளைப் பார்த்து
நாத்தொங்கிய நாய்
ஊளையிட்டுப் படுக்கிறது.
தானெறிந்த ஒளிக்குஞ்சுகளை
தன் கூடார வீட்டுள் காணாத
இக்குழந்தையின் சிறுபுன்னகையும்
பிய்ந்து போகிறது.
தன்வீடு
கசிந்துவிடும் ஈரத்துடன்
நிலத்திலிருந்து அழுகிறது குழந்தை…
நாய் தலையுயர்த்திப் பார்க்கிறது.
----
நிகழ்வில் இருந்து சில படங்கள்