Sunday, March 6, 2016

சிறப்புற நிகழ்ந்த ‘மறுமலர்ச்சி’ வெளியீட்டுவிழா



ஈழத்தின் முதலாவது தமிழ் இலக்கிய இதழாகிய மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு வெளியீட்டு விழா 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.30 மணிக்கு யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னதாக அண்மையில் ஈழத்து இலக்கிய உலகைவிட்டு மறைந்த எழுத்தாளர் செங்கை ஆழியானுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து நிகழ்வில் வரவேற்புரையை நூலக நிறுவன இயக்குநர் சேரன் சிவானந்தமூர்த்தி நிகழ்த்தினார். வெளியீட்டுரையை இதழ்களின் பதிப்பாசிரியர்களில் ஒருவராகிய கோப்பாய் சிவம் நிகழ்த்தினார்.

அறிமுகவுரையை சு. குணேஸ்வரனும், ஆய்வுரையை பேராசிரியர் துரை மனோகரனும் நிகழ்த்தினார்கள். நூலின் முதற்பிரதியை தொழிலதிபர் எஸ்.பி நாகரத்தினமும் இணைப்பிரதிகளை யாழ்ப்பாணம் பிரதேச அபிவிருத்தி வங்கி முகாமையாளர் பிரம்மஶ்ரீ க. இலட்சுமணசர்மாவும் பருத்தித்துறை பிரதேச செயலர் த. ஜெயசீலனும் யாழ் பொதுநூலக பிரதம நூலகர் திருமதி சுகந்தி சதாசிவமூர்த்தியும், நூலக நிறுவன இயக்குநர் சேரன் சிவானந்தமூர்த்தியும் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜாவிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். மறுமலர்ச்சி இதழ்களின் எண்ணிமமாக்கப்பட்ட இறுவெட்டுப்பிரதிகளை சேரன் சிவானந்தமூர்த்தி பதிப்பாசிரியர்களிடம் கையளித்தார். ஏற்புரையை செல்லத்துரை சுதர்சன் நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வு பற்றி டாக்டர் எம்.கே. முருகானந்தன் பின்வருமாறு எழுதியுள்ளார்….
மிகவும் காத்திரமான அர்ப்பணிப்புடன் உருவான நூல் வெளியீட்டு விழாவில் இன்று கலந்து கொள்ள முடிந்தது
ஈழத்து இலக்கிய பரப்பில் முன்னோடியானதும் இந்த மண்ணின் மணம் பரப்பி யதுமான மறுமலர்ச்சி (1946-1948) சஞ்சிகை யின் தொகுப்பு இன்று யாழ் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.
கோப்பாய் சிவம், செல்லத்துரை சுதர்சன் ஆகிய இருவரினதும் பெரு முயற்சியில் அவர்களை பதிப்பாசிரியராக கொண்டு இது வெளியாகி உள்ளது.
95+812+38 பக்கங்களைக் கொண்ட பெரும் தொகுப்பு இது.
இதழ்களை அச்சொட்டாக ஒளிப்பிரதி பண்ணி மிகச்சிறந்த நூலாக வெளிக் கொணர்ந்துள்ளார்கள்.
அட்டையில் உள்ள பாரதியாரின் ஓவியம் மறுமலர்ச்சி இதழில் வெளியான ஓவியத்தின் பிரதிதான்
ஈழத்து இலக்கியத்தில் ஈடுபடு உள்ளவர்கள் வாங்கி படித்து பாதுகாப்புடன் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டிய அரிய ஆவணம்
விலை ரூபா 3000/=
வெளியீடு
சர்வானந்தமய பீடம்
அளவோடை வீதி
இணுவில் மேற்கு
சுன்னாகம்
இலங்கை.

நிகழ்வில் இருந்து ஒளிப்படங்கள்....


























ஒளிப்படங்களுக்கு நன்றி : சதீஸ், தி. செல்வமனோகரன், டாக்டர் எம்.கே முருகானந்தன்