வடமராட்சி இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் தமிழ்ப் பேரறிஞர் பேராசிரியர் கா.சிவத்தம்பி நினைவஞ்சலி நிகழ்வு 15.07.2011 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு மூத்தஎழுத்தாளர் தெணியான் அவர்கள் தலைமையில் யா/கரவெட்டிதேவரையாளி இந்துக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
-----
மேலதிக இணைப்பு
(சிவத்தம்பி அவர்களின் நினைவுநாள் நிகழ்வின் போது கண எதிர்வீரசிங்கம் அவர்களால் ஆக்கப்பட்ட இக்கவிதையை அவரின் அனுமதியுடன் இப்பகுதியில் இணைத்துக் கொள்கிறேன் – சு.குணேஸ்வரன்)
செம்மொழி சிந்தனையாளர் பேராசிரியர் சிவத்தம்பி
-கவிஞர் வதிரி கண. எதிர்வீரசிங்கம்
தமிழ் அகராதிகளின் மூலப்பிரதி
தீயுடன் சங்கமமானது.
தமிழ்த்தாயின் மூத்த புதல்வன்
தரணியில் இல்லாமல் போய்விட்டான்
எந்தப் புயல் வந்தாலும்
நின்றுழைத்த
பெருவிருட்சம்
இறைவழி சென்றுவிட்டது.
யாழ் பல்கலைக்கழத்தை
சர்வதேச அரங்கினில்
பேச வைத்த திருவாய்
இப்போது
பேச்சிழந்து போனது
தமிழ்த்தேசியத்தின் பேராசான்
கரவை மண்ணின் மைந்தன்
வல்வெட்டித்துறையின் மருகன்
தமிழாய்வு கூடத்திற்கு
வழிகாட்டி நின்ற
தொழில்நுட்ப வியலாளன்
நான்காவது உலகத் தமிழாராய்ச்சி
மாநாட்டின் ஆணிவேர்
மாணவர் மனங்களில்
விருப்புடன் குடியிருக்கும்
பிரதான குடியிருப்பாளன்
தமிழ்மொழியை ஊட்டுவதில் பாரிவள்ளல்
எழுத்துலகின் முடிசூடா மன்னன்
ஆய்வு இலக்கியத்தில் அதிமேதை
அரவணைத்துப் பேசுவதில்
தாயை விட மேலானவன்
மற்றையோர் வளர்வதை
தாரகமந்திரமாகக் கொண்டவன்
எந்த மேடையானாலும்
பெருமைப்படுத்தி நின்றவன்
எத்தலைமைத்துவத்தையும்
ஏற்றுக் கொண்டு நடந்தவன்
பதவிபற்றிப் பேசாது
தமிழ் பற்றியே சிந்தித்தவன்
சிந்தனைச் சிற்பி
மற்றவர்களை நிந்திக்காத தம்பி
சிவத்தம்பி
உடல் பருத்தாலும்
உள்ளத்தால் குழந்தையவன்
வரலாறு
சமூகவியல்
பண்பாட்டுக் கோலங்கள்
இலக்கிய இலக்கணம்
தொடர்பாடல்
என்பவற்றோடு
கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்தவன்
சித்தாந்தத்தின் சிறப்புரிமை பெற்றவன்
நாடக கூத்து வடிவங்களின் நலன் விரும்பி
பேராசிரியர் சிவத்தம்பி
கலை வடிவங்களின் அதிபதி
நீங்கள் வானமல்ல
நீங்கள் சமுத்திரமல்ல
நீங்கள் காற்றல்ல
நீங்கள் மலையல்ல
எல்லாவற்றுக்கும் மேலாக
நீங்கள் ஒரு உலகம்
தமிழ் கூறும் நல்லுலகம்
தமிழ் பிரபஞ்சத்தின்
சிறந்த படைப்பால்
உங்கள் படைப்புக்கள் கண்டு
வியந்து போனவர்கள்
உலக மக்கள் மட்டுமல்ல
அந்த பிரம்மாவும்தான்
தமிழை வளர்ப்பதாக கூறி
தம்மை வளர்ப்பவர்கள்
வாழும் இக்காலத்திலும்
நீயொரு சரித்திரமாகிவிட்டாய்
உன்னை வைத்துத்தான்
இனி
காலங்கள் பிரிக்கப்படும்
கா. சிக்கு முன்
கா.சிக்கு பின்
15.07.2011
மு. அநாதரட்சகன் - ‘மார்க்சியம் பற்றிய பார்வை’
து. குலசிங்கம் - ‘மனிதநேயம்’
குப்பிழான் ஐ. சண்முகன் - ‘இலக்கிய இயக்கம்’
வேல் நந்தகுமார் - ‘செவ்வியல் இலக்கியப் பார்வை’