"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Friday, July 15, 2011

தமிழ்ப்பேரறிஞர் பேராசிரியர் கா.சிவத்தம்பி நினைவு நிகழ்வு


வடமராட்சி இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் தமிழ்ப் பேரறிஞர் பேராசிரியர் கா.சிவத்தம்பி நினைவஞ்சலி நிகழ்வு 15.07.2011 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு மூத்தஎழுத்தாளர் தெணியான் அவர்கள் தலைமையில் யா/கரவெட்டிதேவரையாளி இந்துக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் பேராசிரியரின் உருவப்படத்திற்கு திரு சி.க.இராசேந்திரம் (கிளாக்கர்) அவர்கள் மலர்மாலை சூட்டினார். தொடர்ந்து தேவரையாளி இந்துக் கல்லூரி அதிபர் திரு ம. நவநீதமணி அவர்கள் நினைவுச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன. நினைவுரைகளை எழுத்தாளர் மு. அநாதரட்சகன், இலக்கியச்சோலை து. குலசிங்கம், எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன், வேல் நந்தகுமார், சு. குணேஸ்வரன், விரிவுரையாளர் இரா. இராஜேஸ்கண்ணன், கலாநிதி த. கலாமணி ஆகியோர் நிகழ்த்தினர்.

மிக அமைதியாகவும் எளிமையாகவும் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுக்கு இலக்கித்துறையைச் சேர்ந்தவர்களுடன் பேராசிரியரின்பால் மதிப்பு வைத்திருந்த பலரும் கலந்து கொண்டனர்.

பதிவு - சு.குணேஸ்வரன்
-----

மேலதிக இணைப்பு

(சிவத்தம்பி அவர்களின் நினைவுநாள் நிகழ்வின் போது கண எதிர்வீரசிங்கம் அவர்களால் ஆக்கப்பட்ட இக்கவிதையை அவரின் அனுமதியுடன் இப்பகுதியில் இணைத்துக் கொள்கிறேன் – சு.குணேஸ்வரன்)

செம்மொழி சிந்தனையாளர் பேராசிரியர் சிவத்தம்பி

-கவிஞர் வதிரி கண. எதிர்வீரசிங்கம்


தமிழ் அகராதிகளின் மூலப்பிரதி

தீயுடன் சங்கமமானது.

தமிழ்த்தாயின் மூத்த புதல்வன்

தரணியில் இல்லாமல் போய்விட்டான்

எந்தப் புயல் வந்தாலும்

நின்றுழைத்த

பெருவிருட்சம்

இறைவழி சென்றுவிட்டது.


யாழ் பல்கலைக்கழத்தை

சர்வதேச அரங்கினில்

பேச வைத்த திருவாய்

இப்போது

பேச்சிழந்து போனது


தமிழ்த்தேசியத்தின் பேராசான்

கரவை மண்ணின் மைந்தன்

வல்வெட்டித்துறையின் மருகன்

தமிழாய்வு கூடத்திற்கு

வழிகாட்டி நின்ற

தொழில்நுட்ப வியலாளன்

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி

மாநாட்டின் ஆணிவேர்

மாணவர் மனங்களில்

விருப்புடன் குடியிருக்கும்

பிரதான குடியிருப்பாளன்

தமிழ்மொழியை ஊட்டுவதில் பாரிவள்ளல்

எழுத்துலகின் முடிசூடா மன்னன்

ஆய்வு இலக்கியத்தில் அதிமேதை

அரவணைத்துப் பேசுவதில்

தாயை விட மேலானவன்

மற்றையோர் வளர்வதை

தாரகமந்திரமாகக் கொண்டவன்

எந்த மேடையானாலும்

பெருமைப்படுத்தி நின்றவன்

எத்தலைமைத்துவத்தையும்

ஏற்றுக் கொண்டு நடந்தவன்

பதவிபற்றிப் பேசாது

தமிழ் பற்றியே சிந்தித்தவன்


சிந்தனைச் சிற்பி

மற்றவர்களை நிந்திக்காத தம்பி

சிவத்தம்பி

உடல் பருத்தாலும்

உள்ளத்தால் குழந்தையவன்

வரலாறு

சமூகவியல்

பண்பாட்டுக் கோலங்கள்

இலக்கிய இலக்கணம்

தொடர்பாடல்

என்பவற்றோடு

கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்தவன்

சித்தாந்தத்தின் சிறப்புரிமை பெற்றவன்

நாடக கூத்து வடிவங்களின் நலன் விரும்பி

பேராசிரியர் சிவத்தம்பி

கலை வடிவங்களின் அதிபதி


நீங்கள் வானமல்ல

நீங்கள் சமுத்திரமல்ல

நீங்கள் காற்றல்ல

நீங்கள் மலையல்ல

எல்லாவற்றுக்கும் மேலாக

நீங்கள் ஒரு உலகம்

தமிழ் கூறும் நல்லுலகம்

தமிழ் பிரபஞ்சத்தின்

சிறந்த படைப்பால்

உங்கள் படைப்புக்கள் கண்டு

வியந்து போனவர்கள்

உலக மக்கள் மட்டுமல்ல

அந்த பிரம்மாவும்தான்


தமிழை வளர்ப்பதாக கூறி

தம்மை வளர்ப்பவர்கள்

வாழும் இக்காலத்திலும்

நீயொரு சரித்திரமாகிவிட்டாய்


உன்னை வைத்துத்தான்

இனி

காலங்கள் பிரிக்கப்படும்

கா. சிக்கு முன்

கா.சிக்கு பின்

15.07.2011


மூத்தஎழுத்தாளர் தெணியான்

திரு சி.க. இராசேந்திரம் (கிளாக்கர்)

தேவரையாளி இந்துக் கல்லூரி அதிபர் திரு ம. நவநீதமணி


மு. அநாதரட்சகன் - ‘மார்க்சியம் பற்றிய பார்வை’


து. குலசிங்கம் - ‘மனிதநேயம்’


குப்பிழான் ஐ. சண்முகன் - ‘இலக்கிய இயக்கம்’


வேல் நந்தகுமார் - ‘செவ்வியல் இலக்கியப் பார்வை’


சு. குணேஸ்வரன் - ‘நவீன இலக்கியம் பற்றிய கருத்துநிலை’


இரா. இராஜேஸ்கண்ணன் - ‘சமூகவியற் புலமை’


கலாநிதி த. கலாமணி-‘நாடகம் பற்றிய பார்வை’






Thursday, July 14, 2011

கீ.பீ நிதுனின் 'துயரக்கடல்'


புது வரவு


கவிதைநூல் வெளியீடு

கீ.பீ நிதுனின் 'துயரக்கடல்' என்ற கவிதைத் தொகுப்பு நூலின் வெளியீட்டு விழா முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் 14.07.2011 வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. மேற்படி நிகழ்வு கீ. பீட் ஜெயகரன் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் ஆசியுரையை வணபிதா நிருபன் நிசாந் அவர்கள் வழங்கினார். பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட முல்லைத்தீவு கச்சேரி பிரதம கணக்காளர் திரு அ. ஜெயக்குமார் நூலை வெளியிட்டு வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக அருட்சகோதரி யோ. வலன்ரீனா> ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரி அன்ரனி ஜெகநாதன்> முல்லைத்தீவு மகாவித்தியாலய அதிபர் திரு செ. அல்பிரட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நூலின் மதிப்பீட்டுரையை துவாரகனும் சிறப்புரையை தீபச்செல்வனும் நிகழ்த்தினர். ஏற்புரையை நூலாசிரியர் நீ.பீ நிதுன் நிகழ்த்தினார்.

Sunday, July 3, 2011

ஞானம் ஆசிரியருடன் ஒரு சந்திப்பு


பதிவு - சு.குணேஸ்வரன்

ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுடனான ஒரு சந்திப்பு 02.07.2011 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு வடமராட்சி கொற்றாவத்தையில் படைப்பாளி சீனா உதயகுமாரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

முன்னதாக நிகழ்வுக்கு சித்திரா சின்னராஜன் தலைமை வகித்தார். மிகச் சிறிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் ஞானம் சஞ்சிகையின் இன்றைய வருகையும் அதன் குறைபாடுகளை நிவர்த்தி செய்தலும் என்ற தொனிப்பொருளில் உரையாடல்கள் இடம்பெற்றன.

தமிழ்ப்படைப்புலகு இன்று புதிய திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. புதிய புதிய உத்தி, புதிய வடிவமைப்பு, என இன்றைய தமிழ்க்கலையுலகு நகர்ந்து கொண்டிருக்கிறது. கட்டுடைத்தல் போன்ற கோட்பாடுகளில் படைப்புக்கள் வெளியாகின்றன. ஆனால் எங்கள் படைப்பாளிகள் இவற்றை எவ்வளவு தூரம் கவனத்திற் கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக படைப்பாளிகள் வாசிப்பதே குறைவாக இருக்கிறது. ஆனால் தொடர்ச்சியான வாசகன் மிகத் தெளிவாக இருக்கிறான். என்று தனது உரையில் ஞானசேகரன் குறிப்பிட்டார்.

உரையாடலில் மிக முக்கியமாக பின்வரும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

1. தனிப்பட்ட நபர்கள் குறித்த அவதூறுகளை இலக்கியமாக்கி தம்மை இலக்கியவாதிகள் என கொண்டாடும் ஒரு நிலை உருவாகி வருகிறது. அதற்கு ஞானம் இடம்கொடுக்கிறது. சமூகத்திற்கு பிரயோசனமில்லாத, காலத்தைப் பிரதிபலிக்காத படைப்புக்களைப் பிரசுரிப்பது குறித்து ஞானம் கவனமெடுக்கவேண்டும்.

2. வாசகர் வட்டங்களை உருவாக்கி இதழ்கள் படைப்புக்கள் பற்றிய கருத்துப் பரிமாறலை செய்தல் வேண்டும்.

3. நேர்மையான விமர்சன மரபை வளர்த்தெடுக்க வேண்டும்.

இதுபோன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஞானம் ஆசிரியர் இக்கருத்துக்கள் தொடர்பாக தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். தமக்கு வந்துசேரும் படைப்புக்களைக் கொண்டே போட்டிக்குரிய படைப்புக்களைக்கூடத் தெரிவு செய்ய வேண்டிய நிலை இருப்பதாகவும்; இதழில் ஏற்படும் குறைபாடுகளைக் களைவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கருத்துப் பரிமாறலில் சித்திரா சின்னராஜன், சி.வன்னியகுலம், சு.குணேஸ்வரன், கி.நவநீதன், அ.அன்பழகன், வீ.வீரகுமார், சீனா உதயகுமார் ஆகியோர் பங்கெடுத்தனர். மேலும் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர். நன்றியுரையை வீ. வீரகுமார் நிகழ்த்தினார்.

(ஏற்கனவே திட்டமிடப்படாத ஒரு நிகழ்வாக அமைந்தபடியால் ஒளிப்படம் எடுக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை)