"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Saturday, November 24, 2012

தேவமுகுந்தனின் “கண்ணீரினூடே தெரியும் வீதி” சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா நிகழ்வுப் படங்களும் உரைகளும்





அண்மையில் கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் இடம்பெற்ற தமிழ் நாடு காலச்சுவடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட தேவமுகுந்தனின் "கண்ணீரினூடே தெரியும் வீதி.." சிறுகதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வில் திருமதி லலிதாம்பிகை சண்முகநாதன் தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடுவதனையும் கவிஞர் வேலணையூர் தாஸ் வரவேற்புரை நிகழ்த்துவதனையும் வைத்தியக் கலாநிதி எம்.கே. முருகானந்தன் தலைமையுரை  நிகழ்த்துவதையும் திருமதி வசந்தி தயாபரன் வெளியீட்டுரை நிகழ்த்துவதையும் உமா வரதராஜன், சின்னராஜா விமலன் , அ . யேசுராசா ஆகியோர் மதிப்பீடுரைகளை ஆற்றுவதையும் எஸ் எல் எம் ஹனிபா தனது மனப்பதிவுகளை பகிர்வதையும் நூலாசிரியர் தேவமுகுந்தன் ஏற்புரை நிகழ்த்துவதையும் காணலாம் 

நூலின் முதற் பிரதியை ஆ . செல்வந்திரனும் சிறப்புப் பிரதிகளை திரு தை தனராஜ்,திரு கா. கணேசலிங்கம் , கலாநிதி எஸ் ஆர் கிருஸ்ணராஜா , கலாநிதி லக்ஸ்மன் டேவிற் , திரு றோய் நிக்கலஸ் , திரு ஞானராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர் 










தேவமுகுந்தனின் "கண்ணீரினூடே தெரியும் வீதி.." சிறுகதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வில் அ. யேசுராசா நிகழ்த்திய மதிப்பீடுரையின் சுருக்க வடிவம்

கண்ணீரினூடே தெரியும் வீதி
- அ. யேசுராசா

மாணவர் - இளைஞர் ஆகியோரின் வளர்ச்சிக்காக , ‘தெரிதல்’ இதழை நான் வெளியிட்டபோது, 2004 ஆம் ஆண்டளவில் முகுந்தனுடன் தொடர்பு ஏற்பட்டது ; அதிலிருந்து அடிக்கடி தொலைபேசிமூலம் தொடர்பு கொள்வார். பின்னர், அவர் எழுதிய கதைகளை முதல் வாசகனாகப் படித்து, எனது கருத்துகளைப் பரிமாறினேன். இப்போது அவரது சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கிறது ; இந்நிகழ்வில் பங்குபற்றுகிறேன்.

சுய அனுபவ வெளிப்பாட்டுக் கதைகளாக அவரின் கதைகள் உள்ளன ; இக்கதைகளில் முக்கிய பாத்திரங்களாகவரும் நான், இவன், ஜெகன், முரளி, கோபி ஆகியோரை முகுந்தனுடன் இணைத்து உணரலாம்! படைப்பு என்ற வகையில் இது முக்கியமான அம்சமாகும். புறநிலைச் சூழல். கலைஞனைப் பாதிக்கின்றது ; இப்பாதிப்பினால் எழும் உணர்வுகளை தனது சுயமான பார்வையில் பொருத்தமான வடிவங்களில் எழுத்தாளன் வெளிப்படுத்துகிறான். அனுபவம் - படைப்புந்தல் சாராமல் வரும் எழுத்துகள் வெறும் ' கருத்துக்கள்' கொண்டவையாக அமைந்து, உலர்ந்த படைப்புகளாகத் தோன்றும். இலக்கியத்தை வெறும் பிரசாரக் கருவியாக - சமூகமாற்றத்துக்கு மட்டுமேயான ஒன்றாகக் கருதுவோர் சுய அனுபவ வெளிப்பாட்டுக்கு முக்கியம் கொடுப்பதில்லை ; கருத்துக்களுக்கு மட்டுமே முதன்மை அளிக்கின்றனர் ; அதனால் அவ்வாறான படைப்புகள் 'தயாரிப்புகளாக' - கட்டுரைகளாக - வறண்டுபோகின்றன. “கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது நான் வியாசங்கள் எழுதுவேன் “ எனப் பாரதி ஓரிடத்தில் சரியாகத்தான் கூறியிருக்கிறான்! இச் சுய அனுபவ வெளிப்பாடு முகுந்தனின் கதைகளிற்கு வலிமையைச் சேர்க்கிறது.

இலங்கையில் சிங்கள - தமிழ் தேசிய இனங்களுக்கு இடையேயான முரண்பாடு பிரதான முரண்பாடாக இருக்கிறது. அறுபது ஆண்டுகளாகத் தொடரும் இன முரண்பாட்டுப் பிரச்சினை யுத்தம் என்ற நிலைக்கு உயர்ந்து ,மாபெரும் இனப்படுகொலையில் முடிவுக்கு வந்துள்ளது. நடைமுறை வாழ்வில் சிங்கள - தமிழ் மக்களுக்கிடையே ஓர் இடைவெளி தொடர்ந்தபடிதான் உள்ளது . தமிழ் மக்களின் பிரச்சினைகள் நீதியான முறையில் தீர்க்கப்படும்போதே இந்த 'இடைவெளி' மறையும். இந்த யதார்த்த ' இடைவெளி ' முகுந்தனின் கதைகளில் முக்கியமானதாயுள்ளது ; இது கதைகளுக்குக் கனதியைச் சேர்க்கிறது. சிவா, இடைவெளி, இரட்டைக்கோபுரம், ஒரு சுதந்திர நாள் ஆகிய கதைகளில் இதைக் காணலாம்!

யுத்தச் சூழலின் தாக்கத்தை கண்ணீரினூடே தெரியும் வீதி.... , மரநாய்கள் ஆகிய இரு கதைகள் மையமாக வெளிப்படுத்துகின்றன. முதற் கதை முக்கியமானதெனப் பலரும் கருத்துக் கொண்டுள்ளனர் ; போரினால் ஏற்படும் மரணங்கள் இரண்டு இனங்களுக்கும் துயரை ஏற்படுத்துவதை - மானுட அவலத்தை - அது நன்கு வெளிப்படுத்துகிறது. மரநாய்கள் இந்திய அமைதிப் படையைக் குறியீடாகக் கொண்டிருந்தபோதும், அக்குறியீடு இன்று வேறொன்றுக்குமாகவுமுள்ளது!

அமைப்புக்களின் சீர்கேடுகளை வழிகாட்டிகள், கூட்டத்தில் ஒருவன் ஆகிய கதைகள் சித்திரிக்கின்றன. உறுப்பினரின் அபத்தச் செயற்பாடுகள் கிண்டலுடனும் கோபத்துடனும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

சின்ன மாமா கதை ஒரு போலி எழுத்தாளனைப் பற்றிய நல்ல கதை. எழுத்தாளனைப்பற்றிக் கதை எழுதலாமா எனச் சிலர் கேட்கலாம். அவனும் சமுதாயத்தில் ஓர் அங்கம் என்றவகையில், கதைக்குரிய பாத்திரம்தான். ஆயினும் அவ்வாறு எழுதும்போது குறித்த நபரின் பெயரைச் சுட்டாது அவனது சீர்கேடுகள், முரண்பாடுகள் என்பவற்றை உண்மைத் தன்மையுடனும் கலைத்துவத்துடனும் வெளிப்படுத்தவேண்டும். தற்போது பின்னவீனத்துவம் என்ற பெயரில், சில உண்மைகளுடன் பொய்யான புனைவுகளையும் சேர்த்து, குறிப்பான யாரையாவது இழிவுபடுத்த - தார்மீக நிலைப்பாடு ஏதுமற்ற சிலர் முயல்கின்றனர் ; வக்கிர புத்திகொண்ட இந்த எழுத்துக்களை, அவர்களைப்போன்று வக்கிரபுத்தி கொண்டவர்களே இரசிக்கவும் செய்கின்றனர்! ஆனால், இக்குறைபாடு இல்லாமல் நல்லதொரு கதையாக ' சின்ன மாமா' கதை உள்ளது.

இவ்வாறான எல்லாக் கதைகளினதும் உள்ளடக்கங்கள் எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளன எனவும், பார்க்க வேண்டும். சாதாரண மொழியில் - தெளிவானவையாக அவை படைக்கப்பட்டுள்ளன ; தமிழக எழுத்தாளரான அசோகமித்திரனி டமும் சாதாரண மொழியில் சிறந்த கதைகள் படைக்கும் பண்புதான் காணப்படும். பல கதைகளில் விபரங்கள் அடுக்கப்படுகின்றன ; இது முகுந்தனின் தனி இயல்பு சார்ந்தது. சு. மகேந்திரன் என்ற ஈழத்து எழுத்தாளரிடமும் இப்பண்பு சிறப்பானதாக உள்ளது. விபரங்கள் கேலியுடன் தரப்படும்போது வாசிப்பவன் இரசிப்புடன் சிரிக்கவும், சில இடங்களில் கோபிக்கவும் நேர்கிறது.

" புதிய தலைமுறை எழுத்தாளர்களுள் முகுந்தனும் முக்கிய இடம் பெறுகிறார்" என்று தனது பின்னுரையில் நுஹ்மான் சொல்வதை ஏற்றாலும், பொதுவான எழுத்தாளர் என்ற வகையில் என்ன இடத்தை அவர் பெறுகிறார் என்று பார்ப்பதும் நல்லதெனப் படுகிறது. அவ்வாறு பார்க்கையில் அவரும் அவரது இந்த நூலும் முக்கியமான பாராட்டைப் பெறும் தகுதியைக் கொண்டுள்ளனர்.

சரி, புதிய தலைமுறை அல்லாத பழைய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களின் பிந்தியகாலப் படைப்புகள் எல்லாம் தரமாகத்தான் உள்ளனவா என்ற கேள்வியும், இங்கு எழுகிறது. க. சட்டநாதனின் 'மனமடிப்புகளில்....' , 'அந்த மரணமும் அவர்களும் ' ஆகிய சிறுகதைகள் நல்ல கதைகள் அல்ல! முந்தியது வெறும் கருத்துக்களைக் கொண்டு கட்டுரை போன்றுள்ளது! ; மற்றது ஒரு போலி யதார்த்தக் கதையாக உள்ளது. மு. பொன்னம்பலத்தின் ' வரலாற்றுச் சூழல் ' என்ற கதை , ஒரு கட்டுரையே அல்லாது சிறுகதையாகக் கொள்ளத்தக்கதல்ல! இவ்வாறே அவரது பிந்திய தொகுதியான 'முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை' யிலுள்ள அரைவாசிக் கதைகள், நல்ல கதைகள் அல்ல! கே. ஆர். டேவிட் எழுதி அண்மையில் வந்த தொகுதியின் தலைப்புக் கதையான ' பாடுகள்' என்பதும், போலியான கதையாகவுள்ளது ; கிறிஸ்துமஸ் இரவில் நடப்பதான அக்கதை, பொருத்தமில்லாதமுறையில் - வலிந்து - சில விடயங்களை வெளிப்படுத்தச் ‘செய்யப்பட்ட ‘தொன்றாகவே காணப்படுகிறது!

இந்நிலையில், முகுந்தன் பொறுப்புடன் தொடர்ந்து எழுதி நல்ல கதைகளைத் தரவேண்டுமெனச் சொல்லி, எனக்குத் தரப்பட்ட வாய்ப்புக்கும், இதுவரை எனது பேச்சைக் கேட்டமைக்கும் நன்றி கூறி அமைகிறேன் ; வணக்கம்!
---
தேவமுகுந்தனின் 'கண்ணீரினூடே தெரியும் வீதி..' சிறுகதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வில் உமா வரதராஜன் நிகழ்த்திய மதிப்பீடுரையின் சுருக்க வடிவம்
கண்ணீரினூடே தெரியும் வீதி
-உமா வரதராஜன்


தேவ முகுந்தன் என்ற பெயருடன் பரிச்சயம் ஏற்பட்டு சுமார் இரண்டு வருஷங்கள் ஆகின்றன. நான் படித்த அவருடைய முதல் கதை 'சின்ன மாமா'. ஒரு சின்ன இடைவெளியின் பின்னர் நான் வாசித்த அவருடைய அடுத்த கதை 'கூட்டத்தில் ஒருவன்'.

அவருடைய முழுக் கதைகளையும் ஒரு தொகுப்பு வடிவத்தில் படிக்கும் வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கின்றது.

அவருடைய படைப்புலகத்தோடு என்னை நெருங்க வைக்கின்ற பல அம்சங்களை முதலில் இங்கே சொல்ல வேண்டும். முக்கியமாக அவருடைய படைப்புலகம் ஒரு திக்குத் தெரியாத காடல்ல.. நம் எல்லோருக்கும் பரிச்சயமான வழித் தடங்களே அங்கு உள்ளன. தோசையை சதுரமாகச் சுட்டு வடிவத்தை மீறிய வடிவம் இது என்றெல்லாம் அவருடைய எழுத்துகள் வித்தை காட்டுவதில்லை. வினா விடைகள், கடிதங்கள், பத்திரிக்கை செய்திகள், துணுக்குகள்.. இவற்றை எல்லாம் தன்னில் அடுக்கிக் கொண்டு இலக்கிய அடையாள அணி வகுப்பில் அது கலந்து கொள்வதுமில்லை . அல்லது கூலிப் படையின் ஆயுதம் போல் அவர் தன் எழுத்தைப் பயன் படுத்தியதுமில்லை . 'சென்ட் ஒப் எ வுமன்' என்றொரு ஆங்கிலப் படம். மார்டின் ப்ரெஸ்ட் டின் இயக்கத்தில் 'அல் பஸீனோ' நாயகனாக நடித்தது. விழிப் புலனற்ற அந்த நாயகன் ஒரு பெண்ணிடம் வீசும் நறுமணத்தைக் கொண்டு, அவள் பயன் படுத்தியிருப்பது எந்த வகை வாசனைத் திரவியத்தை எனத் துல்லியமாகக் கூறி விடுவான்.


அதே போன்றதுதான் தேவமுகுந்தன் கதைகள் பற்றிய என்னுடைய முகர் திறனும். நான் ஆரம்பத்தில் படித்த இரண்டு கதைகளின் வாசனையும் அவரை எனக்கு அடையாளம் காட்டப் போதுமானவை.

என்னுடைய நோக்கு நிலைக்கும், அவருடைய பார்வைக் கோணத்துக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. என்னைப் போன்றே அவரும் ஒவ்வாத சூழலின் நெருக்குவாரத்துக்குள் தன்னைப் பொருத்திக் கொள்ள முடியாதவர். சூழ நடக்கும் அபத்த நாடகக் காட்சிகளைப் பார்த்து மனதுக்குள் ஒரு குமைச்சல்.. கைகள் கட்டப் பட்டிருக்கும் மத்தியதர வர்க்க சிறு பான்மையினருக்கே உரிய மனப் புகைச்சல் ,ஆற்றாமை, சலிப்பு, தவிப்பு, வெறுப்பு, இவற்றின் பார்வையாளராக இருக்க நேர்ந்து விட்ட அவலத்தின் மீதான கொதிப்பு..... இவைதான் தேவமுகுந்தனின் இந்தப் பத்துக் கதைகளும் என் முன்னால் விரித்து விட்ட அவருடைய உலகம்.

அன்புக்குரிய பேராசிரியர் நுஹ்மான் அவர்களின் முன்னுரை, இந்தத் தொகுதி பற்றி அண்மையில் நான் வாசிக்க நேர்ந்த சில விமர்சனக் குறிப்புகள் யாவும் தேவ முகுந்தனை வேறொரு திசைக்கு நகர்த்திச் செல்ல முயல்கின்றன. தேவ முகுந்தனைத் தமிழியப் பற்றாளராகவும், தமிழ்த் தேசிய ஆதரவு எழுத்தாளராகவும் ஒரு சிமிழுக்குள் அடைக்க முயலுகின்றன.

ஆனால் அரசியல் பதற்றம் மிகுந்த, இன உறவு பிளவுண்ட ஒரு சூழலில் உருவாகும் வெறுப்பையும், அதிருப்தியையும், கசப்புணர்வையுமே முகுந்தனின் எழுத்துகளில் நான் காண்கின்றேன். அவர் முன் திட்டங்களுடனோ, ஏதாவது ஒரு கொள்கை விளக்கத்துக்காகவோ எழுதியதாக நான் உணரவில்லை. அவருடைய பெரும் பாலான கதைகள் யாழ்ப்பாணத்துக்கு வெளியே, யுத்தத்தின் பிரதிபலிப்புகள் எதிரொலிக்கும் தலை நகர் கொழும்பில் நிகழ்கின்றன. அங்கு ஒரு தமிழ் வாலிபன் எதிர் கொண்ட நாளாந்த நெருக்குவாரங்களில் நூறில் ஒரு பங்குதான் தேவமுகுந்தனின் கதைகளில் பதிவாகி இருக்கின்றன. அதனால் உண்டாகும் விமர்சனப் பதற்றங்கள் அனாவசியமானவை .

இலக்கியம் என்பது ஒரு கருத்தை, சித்தாந்தத்தை, தத்துவத்தைப் பிரச்சாரம் செய்து பரப்புவதற்காக எழுதப் படுவதல்ல. அதிகாலையில் வானொலியில் குரல் தரும் நற் சிந்தனையாளனுக்கும், இலக்கிய எழுத்தாளனுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. படைப்பாளி ஒருவனின் மனதில் உந்துதல் எதுவுமற்று உருவாக்கப்படும் சொற்கூட்டங்கள் படைப்பாகா.; ஓர் இலக்கியத்தின் பணி உணர்வை உருவாக்குவது. உண்மை ஒன்றை எழுத்துருவில் அது மறுபடியும் நிகழ்த்திக் காட்ட முயல்கின்றது. கடலை மட்டுமல்லாமல் அதன் அடி நீரோட்டத்தையும் காண்பிப்பது ஒரு படைப்பாளியின் முன் உள்ள சவால். ஓர் இலக்கியப் படைப்பு என்பது அதைப் படிக்கின்ற ஒருவருடைய மனதில் சலனங்களையோ, பிரதி பலிப்புகளையோ உண்டு பண்ணாமல் போனால் அதன் பிறப்புக்கும், பிரசுரத்துக்கும் எந்த அர்த்தமும் இருக்கப் போவதில்லை. நல்ல இலக்கியத்தின் இன்னொரு முக்கிய லட்சணம் அது கொண்டிருக்கும் மொழியும், நுட்பங்களும் ஆகும்.

ஈழத்தில் இன்று நிறையப் பேர்கள் கதைகள் எழுதுகின்றனர். பத்திரிகைகள், சஞ்சிகைகளின் தவிர்க்க முடியாத அம்சங்களாகக் கதைகள் இருக்கின்றன. ஆனால் அவை சிறுகதை வடிவத்தை பிரக்ஞை பூர்வமாக புரிந்து கொண்டவையா, தமிழ் சிறுகதை இலக்கியம் என்ற தொடரோட்டத்தையும், பெரும் பரப்பையும் சரிவரப் புரிந்து கொண்டு உரிய முறையில் தம்மைப் புதுப்பித்து வெளிப்பட்டவையா என்ற கேள்வியை நம்மை நாமே கேட்டுக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

படைப்பாளுமை அற்ற பலர் இன்று இருண்மையான வாக்கியங்கள் மூலமாகவும், அதிர்ச்சியான மொழிப் பிரயோகங்கள் வாயிலாகவும், தனிநபர்த் தாக்குதல்கள் வழியாகவும் இலக்கிய அந்தஸ்த்தைக் கோரி நிற்பதை; இப்போதெல்லாம் காண்கின்றோம். இவற்றை ஒரு புன்னகையுடன் கடப்பதைத் தவிர வேறு வழியில்லை. தேவ முகுந்தன் இந்தக் குறுக்குவழிகளில் நம்பிக்கை வைக்காத ஒரு படைப்பாளி. நேரடியாகக் கதை சொல்லும் எளிமையான பாணியில் நம்பிக்கை கொண்டவர். சொற்களில் பதினோராயிரம் வோல்ட்ஸ் மின்சாரத்தை வைத்தால்தான் வாசகன் அதிர்ச்சிக்குள்ளாவான் என்பது போன்ற அசட்டுத் தனமான எண்ணங்கள் அவரிடம் இல்லை. இந்த உலகத்தின் முக்கியமான படைப்பாளிகளைப் போலவே தேவ முகுந்தனும் சுய அனுபவச் சூட்டுடன், தன் சூழலை, தான் கண்டவற்றைப் பிரதி பலிக்க முயல்கின்றார்.

'மர நாய்கள்' கதை இந்திய அமைதி காக்கும் படையினர் இங்கு நிலை கொண்டிருந்த காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்லுகின்றது. நாம் பறிகொடுத்த சுதந்திரம் என்பது கோழியாகவும், இராணுவ அடக்கு முறை என்பது மர நாயாகவும் இங்கே உருவகப் படுத்தப் படுகின்றது. எந்த விதமான துருத்தலும் இன்றி வெளிப்படும் இந்த குறியீடுகள் தேவமுகுந்தனின் கலைத் திறனுக்கு சிறந்த அத்தாட்சி. மலேசியாவின் நிலக் காட்சிகளில் இரட்டைக் கோபுரங்களுக்கு எப்போதும் முக்கிய இடமுண்டு. இணைய முடியாத இரண்டு இனங்களின் மனப் பாங்குகளை விபரிக்கும், மலேசியாவைக் களமாகக் கொண்ட கதைக்கு தேவமுகுந்தன் மிகவும் பொருத்தமாக இட்டிருக்கும் தலைப்பு 'இரட்டைக் கோபுரங்கள்'.

நம்மில் பல எழுத்தாளர்களுக்கு சிறு கதையை எங்கே தொடங்கி, எங்கே முத்தாய்ப்பு வைப்பது என்பது தெரிவதில்லை. ஆனால் அந்தக் கலை தேவமுகுந்தனுக்குக் கை வந்திருக்கின்றது. 'இடைவெளி' கதையில் அலுவலகத்தின் பெரும் பான்மையினத்தைச் சேர்ந்த சகபாடிகள் செய்கைகளாலும், நடத்தைகளாலும் விஷத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறார்கள். கதையின் முத்தாய்ப்பாக தேவ முகுந்தன் வைக்கும் வாக்கியம் இது.

'அறையின் சுவரில் அமைக்கப் பட்டிருக்கும் பீடத்திலிருந்த புத்த பகவான் சாந்தம் தவழும் வதனத்துடன் தியானித்துக் கொண்டிருந்தார்.'

இதே போல் 'சிவா ' என்றொரு கதை.

தமிழ் மாணவர்களைப் பெரிதும் பொருட் படுத்தாமல் பல்கலைக் கழகத்தில் சிங்கள மானவர்களுடனேயே நெருக்கம் பேணிய சிவா என்ற தமிழ் மாணவன் ஒரு நாள் கைது செய்யப் படுகின்றான். ஆறு வருஷங்கள் சிறையில் இருந்து குற்றம் எதுவும் நிரூபிக்கப் படாமல் சித்திரவதை வடுக்களுடன் விடுதலையாகி வெளியே வருகின்றான். பெரும் பான்மையினத்தைச் சேர்ந்த அவனுடைய காதலி உட்பட அனைவரும் ஒதுங்கி மறைகின்றனர். இந்த நிலையில் மீண்டும் ஒரு நாள் அவன் காணாமல் போய் விடுகின்றான். இந்தக் கதையின் முத்தாய்ப்பும் தேவமுகுந்தனின் கலைத் தேர்ச்சிக்கு ஓர் உதாரணமாக அமைகின்றது.

இவ்வாறு அவர் கதையை முடிக்கின்றார்.

'...காணாமல் போனோர் உறவினர் சங்கம் நடத்திய ஊர்வலத்தில் வெள்ளைச் சேலை உடுத்திய வயோதிபப் பெண் ஒருத்தி சிவாவின் புகைப் படத்தைக் காவிய படி நடந்து சென்றதை டி.வி. செய்தி அறிக்கையில் தான் பார்த்ததாக அழுத படி ரஞ்சன் சொன்னான்.

சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒருவன் என்ற ஒரே காரணத்துக்காக தமிழ் வாலிபன் ஒருவன் கொழும்பு சூழலில் எதிர் கொள்ளும் சங்கடங்களை இடைவெளி, ஒரு சுதந்திரநாள் ஆகிய கதைகள் மிக இயல்பாக விபரிக்கின்றன. 'கண்ணீரினூடே தெரியும் வீதி' மோதலில் சம்பந்தப் பட்ட இரு தரப்பினரின் துயரத்தையும் பேசுகின்றது. நுஹ்மான் அவர்கள் முன்னுரையில் குறிப்பிடுவது போல இந்தத் தொகுப்பின் மிகவும் சிறந்த கதையாக இதையே கூற வேண்டும்.

ஏட்டுச் சுரைக் காயை எவ்விதம் கறிக்குப் பயன் படுத்தலாம் என்பது போல் நடத்தப் படும் அரச திணைக்களங்களின் பயிற்சி முகாம்களை 'வழி காட்டிகள் ' கதை கிண்டலடிக்கின்றது.

'கூட்டத்தில் ஒருவன்' கதையைப் படிக்கும் போது சுந்தர ராமசாமி அவர்களின் கவிதை ஒன்றின் வரிகள் ஞாபகம் வருகின்றன.

'..காலமே! எதற்கு என்னை இங்கெல்லாம்

அழைத்துச் செல்கிறாய்?

என் உணர்வுகளில் நான் குழம்பிச் சரிகிறேனே !'

இந்தக் கதை ரட்சகர்கள் போல் தங்களைத் தாங்களே உருப் பெருப்பித்துக் கொண்டு போலி முகம் காட்டும் உயர் வர்க்கத் தமிழர் சிலரின் நடத்தைகளை விமர்சிக்கின்றது.

படித்து விட்டு வேலையற்று மனச் சலிப்புடனும், சோர்வுடனும் திரியும் ஒருவனின் பறப்பதற்கு முந்திய கூட்டுப் புழு காலத்தை 'இவன் ' என்ற கதை விபரிக்கின்றது.

சின்ன மாமா, இந்தத் தொகுப்பில் உள்ள சிறப்பான கதை. சாதியில் தன்னை விட உயர்ந்த ஒருத்தியை காதலித்து திருமணம் செய்த பின் தன் குடும்பத்தை முற்றிலும் கை விட்ட ஒரு பிரபல எழுத்தாளரின் அஞ்சலி நிகழ்வை ஒட்டியதாக அமையும் இந்தக் கதை ஒரே கல்லில் இரண்டு மாங் காய்களை வீழ்த்துகின்றது. ஒன்று எழுத்தாளனின் போலி முகம்.மற்றது அஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றுவோரின் பொய் நாக்கு.

இறுதியாக நமது அன்புக்குரிய பேராசிரியர் நுஹ்மான் அவர்கள் இந்த நூலின் முன்னுரையில் 'எழுத்தாளன் ஒருவனிடம் இருக்க வேண்டிய அறம் 'பற்றி சில வார்த்தைகள் எழுதியுள்ளார்.

அவர் கூறுகின்றார்:

'..கடந்த முப்பது ஆண்டு கால இன முரண்பாடு, மோதல், யுத்தம் பற்றிய பிரச்சனைகளை ஈழத் தமிழ் இலக்கியம் எவ்வாறு கையாண்டுள்ளது என்ற கேள்வியை நான் இங்கு மீண்டும் எழுப்ப விரும்புகின்றேன். பெரும் பாலும் இவை பாதிக்கப் பட்டவர்களின் குரலாக, சார்பு நிலைப் பட்டவையாகவே காணப் படுகின்றன. சிங்கள மேலாதிக்கம், இராணுவ ஒடுக்குமுறை,, அரச பயங்கரவாதம் பற்றிய விபரிப்புகளாகவே அவை பெரிதும் வெளிப் பட்டுள்ளன. அது ஒரு வகையில் நியாயமாகவும் தோன்றலாம் .எனினும் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் விடுதலை இயக்கங்கள் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகளையும், கொலைகளையும், பயங்கரவாதத்தையும் அதன் விளைவுகளையும் பற்றிப் பேசாத இலக்கியம் 'ஒரு பக்கச் சார்பானது 'என்பதையும் நாம் அழுத்திக் கூற வேண்டும்.

இந்தியப் பிரிவினையின் போது இந்துக்களும், முஸ்லீம்களும் பல லட்சக் கணக்கில் கொள்ளப் பட்டதையும், புலம் பெயர்ந்ததையும் பின்னணியாகக் கொண்டு சாதாத் ஹசன் மண்டோ, கே.ஏ .அப்பாஸ் போன்றவர்கள் அதற்கு வெளியே இருந்து அவற்றின் அபத்தத்தைப் பற்றி எழுதியதை நினைத்துப் பார்க்கின்றேன். எழுத்தாளனின் அற உணர்வுக்கு நாம் அவற்றை உதாரணமாகக் கொள்ளலாம். தமிழில் அத்தகைய எழுத்துகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

இது நுஹ்மான் அவர்களின் கூற்று.

இந்தக் கூற்றுடன் நான் இங்கே முரண்பட வேண்டி உள்ளது.முதலில் நாம் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டியது

தேவமுகுந்தன் எந்தவொரு விடுதலை இயக்கத்தின் பேச்சாளரோ எழுத்தாளரோ அல்ல. அவர் சூழலால் பாதிக்கப் பட்ட ஒரு சாமானியர். அவருக்கு முன்னால் இரண்டு தேர்வுகள் இருக்கின்றன.

ஒடுக்கு முறையை சகித்துக் கொண்டு, கூனிக் குறுகி, வளைந்து கொடுத்து, எருமைத் தோலுடன் பாண்டியன் பரிசுக்காக அரண்மனை வாசலில் காத்திருப்பதா?

அல்லது

உரத்த குரலில் இல்லா விட்டாலும் பரவாயில்லை ஒரு சிறு முனகல் தொனியிலாவது நம் எதிர்ப்புணர்வைப் பதிவு செய்வதா?


தேவமுகுந்தன் இரண்டாவது காரியத்தை செய்திருக்கிறார் என்றே நான் நம்புகின்றேன்.

எழுத்தாளனின் அறம் என்பது எரிமலை மேல் இருந்து கண்களை மூடிக் கொண்டு தவமியற்றுவது அல்ல. ஓர் எழுத்தாளனின் பணி அப்பத்தைப் பிய்த்து பாவிகளுக்கும், அப்பாவிகளுக்கும் சம பங்கிடுவதுமல்ல.

தராசுத் தட்டின் முள் சரி நடுவில் இருக்கிறதா எனப் பார்ப்பதும், இரண்டு தட்டுகளின் எடைகளை சம அளவில் பேணுவதும் சில்லறைக் கடைக் காரர் ஒருவரின் வேலை. ஆண்டாண்டு காலமாக அநீதி இழைக்கப் பட்ட, ஒடுக்கப் பட்ட ஓர் இனத்தைச் சேர்ந்த ஒருவனின் ஈனஸ்வரமான குரலை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஓர் எழுத்தாளனின் அறத்தைப் பற்றிப் பேச முன்னர் ஓர் அரசனின் அறம் பற்றியும் நாம் பேச வேண்டியுள்ளது. அறப் பண்புகள் ஓர் எழுத்தாளனுக்கு மட்டும் உரிய லட்சணமல்ல.

அரசனுக்கும் அவை வகுக்கப் பட்டிருக்கின்றன.

இரவில் தாக்குதல் நடத்தக் கூடாது. மாலை வரைதான் போர். குறிப்பிட்ட இடத்தில் களம் அமைத்து முன் கூட்டியே அறிவித்துப் போரிட வேண்டும். கண் இமைத்தாலோ தலைப் பாகை அவிழ்ந்தாலோ அவனைத் தாக்கக் கூடாது.புற முதுகிட்டு ஓடுபவனைப் பின் தொடர்ந்து சென்று தாக்கக் கூடாது. போர் தொடுக்கும் முன்னர் பசு, பார்ப்பனர், பெண், நோயாளி, ஆண் பிள்ளை அற்றவர்கள் ஆகியோர் பாது காப்பான இடங்களை நோக்கி அகற்றப் பட வேண்டும். இப்படி அறம் சார்ந்த பல கடப்பாடுகள் ஓர் அரசனுக்கு உண்டு.

இவையெல்லாம் வழக்கொழிந்த, நிலை குலைந்து போன ஒரு காலத்தில் நாம் இப்போது இருக்கின்றோம். இந்த சூழலில் அறத்தின் பெயரால் ஓர் எழுத்தாளனின் கையைக் கட்டிப் போடுவது நியாயமான செயலாகத் தெரியவில்லை.
---
நன்றி - படங்கள் மற்றும் உரைகள் : தேவமுகுந்தனின் முகநூல்

Saturday, November 3, 2012

உபநந்த வெளிகலயின் "முகாம்" நாடகம்



'உபநந்த வெளிகல' யின் "முகாம்" என்ற நாடகம் அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவலகம் தயாரித்து அளித்த நாடகத்தில் இருந்து சில ஒளிப்படங்கள்.

தகவலுக்கும் படங்களுக்கும் நன்றி - நந்தினி சேவியர்