மறைந்த எழுத்தாளர் ஆனந்தமயிலின் 31 ஆம் நாள் நினைவாக அவரது குடும்பத்தினர் காத்திரமான ஒரு நூல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
ஆனந்தமயில் பற்றி நாம் இதுவரை அறிந்து கொள்வதற்கு அவரது ஒரேஒரு நூலான ‘ஒரு எழுதுவினைஞனின் டயறி’ மாத்திரமே இருந்தது.
அவரின் ஏனைய எழுத்துக்களை இதுவரை படிப்பதற்குரிய வாய்ப்பு இருக்கவில்லை.
இந்நிலையில் ஆனந்தமயில் எழுதிவற்றுள் பிரசுரமாகாத படைப்புக்கள் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் தொடர்பான புகைப்படங்களுடன்; நவசக்திப் பாமாலை,தச்சை விநாயகர் பற்றிய சில வெண்பாக்கள், ஞானமுருகையா, மடைவழிபாடு ஆகிய சமயம் சார்ந்த பாடல்களும், அம்புலிமாமாத்தூது, வண்ணத்துப்பூச்சி பார், சிறுமி லக்சா, மழைப்பாட்டு, செம்பகம், ஆகிய சிறுவர் பாடல்களும்; அம்மாவரை அவன் என்ற குறுநாவலும் இத்தொகுப்பில் உள்ளன. அட்டைப்படத்தை எளிமையாக வடிவமைத்திருப்பவர் யோகி.
இவை தவிர அவர் எழுதிய கவிதைகளை தனி நூலாகக் கொண்டு வரும் எண்ணம் உள்ளதாக அவரது மகன்மாரில் ஒருவரான விரிவுரையாளர் நித்திலவர்மனுடன் உரையாற்றியபோது அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.
ஈழத்துச் சிறுகதைகளில் மிக அனாயாசமான நடையுடன் கதைசொல்லும் லாவகம் ஆனந்தமயிலுக்கு கைவந்துள்ளதை அவரது கதைகளை வாசித்தோர் புரிந்து கொள்வர். ஒரு நல்ல முயற்சி அவரது பிள்ளைகளின் ஊடாக சாத்தியமாகியுள்ளது. அன்னார் தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்களை அவரது இலக்கிய மற்றும் சமூக ஈடுபாடுகளை இந்நூல் வெளிக்கொண்டு வரும் என்பதில் மிகையில்லை.
பதிவு : சு. குணேஸ்வரன்