"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Sunday, August 30, 2020

கோ. கைலாசநாதனின் ஓவியங்கள் பற்றிய உரையாடல்

 


“உணர்தல் மற்றும் பதிவுசெய்தல்” என்னும் தலைப்பில் ஓவியர் கோ. கைலாசநாதனின் ஓவியங்கள் பற்றிய உரையாடல் 30.08.2020 ஞாயிறு காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் நல்லூரில் சமகால கலை கட்டடக்கலை மற்றும் வடிவமைப்புக்கான இலங்கை ஆவணக் காப்பகத்தில் நடைபெற்றது. மேற்படி உரையாடலில் தா. சனாதனன் அவர்கள் நிகழ்ச்சியை நெறியாள்கை செய்து ஓவியர் கோ. கைலாசநாதனின் கலைச்செயற்பாடு பற்றி உரைநிகழ்த்தினார். கைலாசநாதனின் தெரிவுசெய்யப்பட்ட ஓவியங்கள் திரையில் காட்சிப்படுத்தப்பட்டு அந்த ஓவியங்களை வரைவதற்கான உணர்வுநிலை மற்றும் அவை பற்றி தனது கருத்துநிலை ஆகியவற்றையும் கோ. கைலாசநாதன் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து உரையாடலில் கலந்து கொண்டவர்களின் கருத்துக்களும் பரிமாறப்பட்டன.








Friday, August 21, 2020

‘திருக்கரம்’ வெளியீடு

 

வடமராட்சி தெற்கு மேற்கு கரவெட்டி பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் திருக்கரம் ஆக்க இலக்கிய மலர் வெளியீடு 21.08.2020 மாலை 3.30 மணிக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலரும் கலாசாரப் பேரவையின் தலைவருமாகிய திரு . தயாரூபன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மங்கள விளக்கேற்றலைத் தொடந்து வரவேற்புரையை கலாசாரப் பேரவை நிர்வாக உறுப்பினர் திரு . பாலன் அவர்களும் வாழ்த்துரையை கலாசாரப் பேரவை பொருளாளர் திரு இன்பரூபன் அவர்களும் நிகழ்த்தினர்.

மூத்த எழுத்தாளர் குப்பிழான் . சண்முகன் வெளியீட்டுரையை நிகழ்த்தினார். நூலின் முதற்பிரதியை கணக்காளர் திரு எஸ் சுதர்சன் அவர்கள் வழங்கி வைத்தார். இலக்கிய மலர் தொடர்பான உரையை யாழ் பல்கலைக்கழக சமூகவியற்றுறை சிரேஸ்ட விரிவுரையாளர் திரு . இராஜேஸ்கண்ணனும் ஏற்புரையை இணை இதழாசிரியர்களில் ஒருவராகிய கலாநிதி சு. குணேஸ்வரனும் நிகழ்த்தினர். நன்றியுரையை கலாசாரப் பேரவை உபதலைவர் கலாபூஷணம் கண.எதிர்வீரசிங்கம் நிகழ்த்தினார்.

கடந்த தலைமுறையினரின் வாழ்வியலை வெளிப்படுத்தும் அழகான ஓவியத்தை அட்டையில் தாங்கி (ஓவியர் கோ. கைலாசநாதன்) திருக்கரம் மலர் வெளிவந்துள்ளது.