"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Sunday, January 5, 2014

“உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு” வெளியிடப்பட்டது.




19 ஆம் நூற்றாண்டில் ஈழத்தின் பெரும்புலவராகத் திகழ்ந்த உடுப்பிட்டி சிவசம்புப் புலவரின் படைப்புக்களைக் கொண்ட “உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு – தேவபாகமும் மானுடபாகமும் ” நூல் வெளியீடு 05.01.2014 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் பேராசிரியர் அ. துரைராஜா மண்டபத்தில் வல்வை ந. அனந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.

முன்னதாக உடுப்பிட்டி துவாளிபிள்ளையார் ஆலயத்தில் இருந்து மங்களவாத்தியங்கள் சகிதம் நிகழ்வு நடைபெறும் கல்லூரி மண்டபத்திற்கு நூற்பிரதி எடுத்துவரப்பட்டது.

நிகழ்வில் மங்களவிளங்கேற்றலைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் ந. சஞ்ஜீவன் இறைவணக்கம் நிகழ்த்தினார், வரவேற்புரையை பொறியியலாளர் நீலகண்டன் நித்தியானந்தன் நிகழ்த்தினார், கந்தவனம் தேவஸ்தான பிரதமகுரு சிவப்பிரம்மசிறீ ச. வைத்தியநாதக்குருக்கள் ஆசியுரையை நிகழ்த்தினார். வாழ்த்துரைகளை யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் கி. விசாகரூபன், உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி அதிபர் சு. கிருஸ்ணகுமார் ஆகியோர் நிகழ்த்தினர்.

நூல் வெளியீட்டுரையை ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி இராஜேஸ்வரி தில்லையம்பலமும் அறிமுகவுரையை பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் சிரேஸ்ட விரிவுரையாளர் பூ. சோதிநாதனும் நிகழ்த்தினர்.

நூல் நயப்புரையை யாழ் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜாவும் ஆய்வுரையை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் வ.மகேஸ்வரனும் நிகழ்த்தினர். நூலின் முதற்பிரதியை, நூல் பதிப்பாசிரியர்களில் ஒருவரும் சிவசம்புப் புலவரின் பூட்டனுமாகிய புலவர்மணி கா. நீலகண்டன் வழங்க வைத்தியகலாநிதி ந. குகதாசன் பெற்றுக்கொண்டார். சிறப்புப் பிரதிகளை யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் சி. சிறிசற்குணராசா வழங்கினார்.

நூல் ஏற்புரையை பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளரும் நூல் பதிப்பாசிரியர்களில் ஒருவருமாகிய செல்லத்துரை சுதர்சன் நிகழ்த்தினார். நன்றியுரையை கொழும்பு ஆதாரவைத்தியசாலை இருதயவியல்துறை சிரேஷ்ட பதிவாளர் வைத்திய கலாநிதி பானு பிரசன்னா நிகழ்த்தினார்.

புலவர் குடும்பத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் உடுப்பிட்டி சிவசம்புப் புலவரின் உறவுகளும் கல்வித்துறை சார்ந்தோரும் இலக்கியத்துறை சார்ந்தோரும் கலந்து கொண்டனர்.

பதிவும் படங்களும் - சு. குணேஸ்வரன்