வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தமது தொடர்முயற்சியாக மேலும் 5 நூல்களை நேற்றையதினம் (09.11.2019) யாழ். பல்கலைக்கழக
வித்தியானந்தன் மண்டபத்தில் அறிமுகம் செய்தது. அவற்றில் 3 நூல்கள் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டன.
முருகையன் கவிதைகளின் முழுவதையும் திரட்டி "முருகையன் கவிதைகள்" என்ற பெருந்தொகுப்பாகத் தந்திருக்கிறார்கள். 1080 பக்கங்களில் அமைந்த அத்திரட்டுக்கு கு.றஜீபன், க. தணிகாசலம், ச. தனுசன் ஆகியோர் பதிப்பாசிரியர்களாக செயற்பட்டுள்ளார்கள்.
கல்வயல் வே. குமாரசாமியின் கவிதைகள் முழுவதையும் தொகுத்து 384 பக்கங்களில் "கல்வயல் வே. குமாரசாமி கவிதைகள்" என்ற தொகுப்பாகத் தந்திருக்கிறார்கள். அத்தொகுப்புக்கு பதிப்பாசிரியர்களாக சிவ. முகுந்தன், கு.றஜீபன் ஆகியோர் செயற்பட்டுள்ளார்கள்.
பவணந்தி முனிவரின் நன்னூல் சூத்திரங்களைத் தழுவி இலகுவான உரைநடையில் விரித்து இயற்றப்பெற்ற "செந்தமிழ் இலக்கணம்" சேர் பொன்னம்பலம் இராமநாதன் எழுதியது. இந்நூலின் முதற்பாகத்தை 536 பக்கங்களில் தந்திருக்கிறார்கள். இந்நூலின் மீள்பதிப்பாசிரியர்களாக பேராசிரியர் அ. சண்முகதாஸ், பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ், கு. றஜீபன் ஆகியோர் செயற்பட்டுள்ளார்கள்.
இந்நூல்கள் அன்றையதினம் நிகழ்வுக்குச் சென்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் இருந்தது. ஆனால் இதற்கு மேலாக நூல்களின் பிரதிகளை பொதுசன நூலகங்களுக்கும் பாடசாலை நூலகங்களுக்கும் கொடுத்து உதவுவதும் தேவையான மற்றொரு கடமையாக இருக்கின்றது.
அது மாத்திரமன்றி இவற்றை மலிவுப் பதிப்பாக உரிய அனுமதிகளோடு விற்பனைக்கு பெறக்கூடியதாக இருக்குமாயின் ஏனையவர்களும் பயன்பெறக்கூடியதாக இருப்பதோடு இப்பதிப்புப் பணிகள் மிகப் பரவலாக பல்வேறு தரப்பினருக்கும் சென்று சேர வழிவகுக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
இவை காலத்தில் நீண்டு நிலைக்கக்கூடிய அரிய தமிழ்ப்பணிகள். இப்பணிக்கு முதற்காரணர்களாக அமைந்த வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினரும், பதிப்பாசிரியர்களாகச் செயற்பட்டு அரும்பணியாற்றியவர்களும் நன்றிக்குரியவர்கள்
s.kuneswaran