மறைந்த எழுத்தாளர் ஆனந்தமயிலின் 31 ஆம் நாள் நினைவாக அவரது குடும்பத்தினர் காத்திரமான ஒரு நூல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
ஆனந்தமயில் பற்றி நாம் இதுவரை அறிந்து கொள்வதற்கு அவரது ஒரேஒரு நூலான ‘ஒரு எழுதுவினைஞனின் டயறி’ மாத்திரமே இருந்தது.
அவரின் ஏனைய எழுத்துக்களை இதுவரை படிப்பதற்குரிய வாய்ப்பு இருக்கவில்லை.
இந்நிலையில் ஆனந்தமயில் எழுதிவற்றுள் பிரசுரமாகாத படைப்புக்கள் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் தொடர்பான புகைப்படங்களுடன்; நவசக்திப் பாமாலை,தச்சை விநாயகர் பற்றிய சில வெண்பாக்கள், ஞானமுருகையா, மடைவழிபாடு ஆகிய சமயம் சார்ந்த பாடல்களும், அம்புலிமாமாத்தூது, வண்ணத்துப்பூச்சி பார், சிறுமி லக்சா, மழைப்பாட்டு, செம்பகம், ஆகிய சிறுவர் பாடல்களும்; அம்மாவரை அவன் என்ற குறுநாவலும் இத்தொகுப்பில் உள்ளன. அட்டைப்படத்தை எளிமையாக வடிவமைத்திருப்பவர் யோகி.
இவை தவிர அவர் எழுதிய கவிதைகளை தனி நூலாகக் கொண்டு வரும் எண்ணம் உள்ளதாக அவரது மகன்மாரில் ஒருவரான விரிவுரையாளர் நித்திலவர்மனுடன் உரையாற்றியபோது அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.
ஈழத்துச் சிறுகதைகளில் மிக அனாயாசமான நடையுடன் கதைசொல்லும் லாவகம் ஆனந்தமயிலுக்கு கைவந்துள்ளதை அவரது கதைகளை வாசித்தோர் புரிந்து கொள்வர். ஒரு நல்ல முயற்சி அவரது பிள்ளைகளின் ஊடாக சாத்தியமாகியுள்ளது. அன்னார் தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்களை அவரது இலக்கிய மற்றும் சமூக ஈடுபாடுகளை இந்நூல் வெளிக்கொண்டு வரும் என்பதில் மிகையில்லை.
பதிவு : சு. குணேஸ்வரன்
ஊடகவியலாரர்களின் செல்வாக்கு மிக்க அரைகுறைப் படைப்பாளிகளின் படைப்புகளுக்கு கிடைக்கும் கவனிப்பு ஆனந்தமயில், நந்தினி சேவியர் போன்ற தரமான படைப்பாளிகளுக்கு கிடைக்கவில்லை என்பது சோகம். ஆனந்தமயிலின் சிறுகதைகளை அவரது மகன் நித்திலவர்ணன் தொகுதியாக்கும் வரையும் அவரை பலருக்கும் தெரியாமல் இருந்தது." "மகன் தந்தைக்காற்றும் உதவி .... "
ReplyDeleteஉண்மைதான் நிர்மலன். இனியாவது ஈழத்துப் படைப்புப் பற்றிப்போசும்போது இந்தப் படைப்பாளிகள் தவறவிடப்படாமல் இருந்தால் அதுவே பெரிதாக இருக்கும்.
ReplyDeleteஒரு எழுதுவினைஞனின் டயறி வரும்வரை நானும் ஆனந்தமயில் எனும் எழுத்தாளரை அறிந்திருக்கவில்லை.தொகுப்புகள் வரவேண்டுமென்பது எவ்வளவு அவசியம் என்பது இப்போது புரிகிறது.2008 இல் வடமாகான நூலுக்கான சிறப்புப்பரிசு அந்நூலுக்குக் கிடைத்ததையிட்டுப் பெருமை கொள்ளலாம்.
ReplyDeleteவருகைக்கு நன்றி தாட்சாயணி. ஆனந்தமயிலின் இந்தத்தொகுப்பில் ஒரு பிரதி உங்களுக்குக் கிடைக்க வழி செய்கிறேன்.
ReplyDelete