"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Sunday, December 19, 2010

அறிவோர் கூடல் - மறுபாதி சஞ்சிகை அறிமுகமும் கருத்துரையாடலும்து. குலசிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் பருத்தித்துறை அறிவோர் கூடல் 19.12.2010 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் கவிதைக்கான காலாண்டிதழ் ‘மறுபாதி’ (முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ் இதழ் - 5) பற்றிய அறிமுகமும் அது தொடர்பான கருத்துரையாடலும் இடம்பெற்றது.

நிகழ்வில் முன்னதாக தொடக்கவுரையை இலக்கியச் சோலை து. குலசிங்கம் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ‘க்ரியா’வின் தற்காலத் தமிழகராதி வரிசையில் பார்வையற்றோருக்காக ஆக்கப்பட்ட பிறெய்லி அகராதி முயற்சி பற்றிய புதிய விடயத்தையும் தமிழகப் பயணத்தின்போது தான் பெற்றுக்கொண்ட இலக்கியம்சார் அனுபவங்களையும் பரிமாறிக்கொண்டார். தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்தப்படும் புதிய முயற்சிகள், இளைய சந்ததியினர் பழந்தமிழ் இலக்கியம் உட்பட இணையத்தில் இன்று காட்டும் தீவிரமான ஆர்வம் ஆகியன பற்றிக் குறிப்பிட்டார்.

நிகழ்வில் மறுபாதி இதழின் தொடக்கம், அதன் நோக்கம், இதழின் தொடர்ச்சியான வருகை, ஆகியன பற்றிய அறிமுகத்தினை இணையாசிரியர் சி.ரமேஷ் நிகழ்த்தினார். தொடர்ந்து இதழின் வருகையில் கருத்தியல் ரீதியாகவும் படைப்புக்களின் தெரிவிலும் தாம் எதிர்கொண்ட சிக்கல்களை இதழாசிரியர் சித்தாந்தன் எடுத்துரைத்தார். தொடர்ந்து கருத்துரையாடல் இடம்பெற்றது.
கருத்துரையாடலில் இதழின் தீவிரத்தன்மை, கவிதைகளின் தெரிவு, இதழ் வடிவமைப்பு பற்றியும் ;இன்றைய கவிதைகள் புரியவில்லை என்ற கருத்து, கவிதைகளின் மொழிதல் பிரச்சினை, ஈழத்துக் கவிதை வரலாறு, மரபுக் கவிதைகளுக்கு யாப்பிலக்கணத்தின் அவசியம், காலத்தைக் கருத்திற் கொண்ட படைப்புக்கள், எதிர்காலத் திட்டங்கள், ஆகியன பற்றிய தொடர்ச்சியான கருத்துரைகள் இடம்பெற்றன.

இக்கருத்துரையாடலில் ரமேஸ், சித்தாந்தன், துவாரகன், பா.துவாரகன், அஜந்தகுமார், குப்பிழான் ஐ.சண்முகன், வேல் நந்தன், சின்னராஜா, பி. கிருஷ்ணானந்தன், செ.கணேசன், து.குலசிங்கம் ஆகியோர் பங்கெடுத்தனர்.
மேற்படி நிகழ்வு காத்திரமான உரையாடலுக்கான ஒரு களமாக அமைந்திருந்தது.

பதிவும் படங்களும் :- சு. குணேஸ்வரன்


4 comments:

 1. குலசிங்கம் வீட்டு 'சவுக்கண்டியில்'
  அந்த சொகுசான நாற்காலிகளில்
  நானும் சேர்ந்திருந்து பங்கு பற்றிய
  உணர்வு கிட்டியது.
  பகிர்வுக்கு மிக்க நன்றி துவாரகன்.

  ReplyDelete
 2. மிக்க நன்றி டொக்டர். நீங்கள் வளர்த்து விட்ட களமல்லவா?

  ReplyDelete