"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Sunday, January 30, 2011

‘கயல்விழி’ யின் “உப்புக்காற்றில் மலர்ந்த மலர்கள்”





-கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா

பதிவும் படங்களும் : சு. குணேஸ்வரன்

யல்விழியின் ‘உப்புக்காற்றில் மலர்ந்த மலர்கள் ’ கவிதைத்தொகுதியின் வெளியீட்டு விழா 29.01.2011 சனிக்கிழமை வடமராட்சி இன்பர்சிட்டி பொதுநோக்கு மண்டபத்தில் இன்பர்சிட்டி க. கூ. சங்கத் தலைவரும் சமாதான நீதவானுமாகிய திரு வே விசுவலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் இலக்கியச்சோலை து. குலசிங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நூல் வெளியீட்டுரையினை நிகழ்த்தி நூலை வெளியிட்டு வைத்தார்.

நிகழ்வில் இன்பர்சிட்டி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு வே. செந்திவேல் வரவேற்புரையையும், யோகப்பயிற்சி ஆசிரியரும் வடமாகாண கராத்தே சங்கத் தலைவருமான மா. இரத்தினசோதி தொடக்கவுரையினையும் நிகழ்த்தினர்.

ஆசியுரைகளை மகாகணபதி சிவானந்தராஜாக்குருக்கள், பங்குத்தந்தை அகஸ்ரின் அடிகளார். சைவப்புலவர் இரத்தினசபாபதி திருமாறன் குருக்கள் ஆகியோரும், வாழ்த்துரைகளை கந்தவனம் சூரியகுமாரன், எழுத்தாளர் சீனா உதயகுமார் ஆகியோரும் நிகழ்த்தினர்.

நூலின் முதற்பிரதியை திரு மா. இரத்தினசோதி அவர்கள் பெற்றுக்கொண்டார். நூல் ஆய்வுரையினை வல்வை சிதம்பராக்கல்லூரி ஆசிரியர் திரு சோ. சிவனேஸ்வரன் நிகழ்த்தினார். ஏற்புரையினை நூலாசிரியர் அருமைத்துரை கயல்விழி நிகழ்த்தினார்.

நூலாசிரியர் கயல்விழி 1992 இல் பிறந்தவர். வடஇந்து மகளிர் கல்லூரியில் கலைப்பிரிவில் கல்வி கற்று வருகிறார். மிகச் சிறிய வயதில் கவிதைத்துறையில் ஆர்வம் கொண்டு நூலாக்கி வெளியிடும் முயற்சியை பலரும் பாராட்டினர். தொடர்ச்சியான வாசிப்பும் அனுபவமும் எதிர்காலத்தில் நல்ல தொகுப்புக்கள் வருவதற்குரிய வாய்ப்பை வழங்கும் என பேச்சாளர்கள் குறிப்பிட்டனர்.

இலக்கியப் பந்தம்பிடிப்பு எதுவுமில்லாத சாதாரண கிராம மக்கள் முன்னிலையில் மிக எளிமையாக நிகழ்ந்த இந்நூல் வெளியீடு எதிர்கால இளம் சந்ததியினர் மேலும் எழுத்துத்துறைக்குள் நுழைவதற்குரிய வாய்ப்பைக் கொடுக்கும் என எண்ணலாம்.

நிகழ்வின் படங்கள் சில

















Saturday, January 15, 2011

அறிவோர் கூடல் - பொ. கருணாகரமூர்த்தியுடனான இலக்கியச் சந்திப்பு






பதிவும் படங்களும் - சு. குணேஸ்வரன்

இலக்கியச்சோலை து. குலசிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் அறிவோர் கூடல் 14.01.2011 வெள்ளிக்கிழமை பி. 4.00 மணிக்கு பருத்தித்துறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் புலம்பெயர் படைப்பாளிகளில் ஒருவராகிய பொ. கருணாகரமூர்த்தியுடனான (ஜேர்மனி) இலக்கியச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் தொடக்கவுரையை து. குலசிங்கம் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனதுரையில் இன்று வழக்கிழந்து வருகின்ற எமது கிராமியச் சொற்கள் பற்றி விரிவாகப் பேசினார். கருணாகரமூர்த்தி தனது படைப்புக்களில் இவ்வாறான கிராமியச் சொற்களை அநாயாசமாகவும்> புதிய சொற்களை கதாமாந்தர்களின் வாழ்வியலுக்கு ஏற்பவும் மிக இயல்பாகக் கையாள்வதை எடுத்துக் கூறினார். தமிழ்ப்படைப்புலகத்தில் கவனத்திற்குரிய படைப்பாளியாக தன்னை நிலைநிறுத்திவரும் கருணாகரமூர்த்தியின் கதைகளில் இருந்து சிலவற்றையும் எடுத்துக் காட்டிப்பேசினார்.

தொடர்ந்து கருணாகரமூர்த்தி பற்றிய அறிமுகவுரையை சு. குணேஸ்வரன் நிகழ்த்தினார். ‘ஒரு அகதி உருவாகும் நேரம்’ என்ற மூன்று குறுநாவல்களைக் கொண்ட தொகுதியுடன் தமிழத்திலும் ஈழத்திலும் கவனத்திற்குரிய படைப்பாளியாக மிளிர்ந்த கருணாகரமூர்த்தி கதைசொல்லும் பாணி நயக்கத்தக்கதாகவும்> புலம்பெயர் சமூகம் எதிர்கொள்கின்ற வாழ்க்கை முரண்களையும் பண்பாட்டு நெருக்குவாரங்களையும் எடுத்துக் காட்டுவதில் முதன்மை பெறுகின்றார் என்று குறிப்பிட்டார்.

நிகழ்வில் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘பதுங்குகுழி’ என்ற சிறுகதைத் தொகுப்பு மிக எளிமையாக வெளியிட்டு வைக்கப்பட்டது. நிகழ்வில் எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் நூலை வெளியிட்டு வைத்தார்.
தொடர்ந்து கருணாகரமூர்த்தி உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் தனது எழுத்துலக ஆரம்பம்> புலம்பெயர்ந்த இளைய தலைமுறைப் பிள்ளைகளின் தமிழ்மொழிப் பயில்கை> ஐரோப்பிய சமூகத்திற்கும் தமிழர் சமூகத்திற்கும் இடையில் இருக்கும் பண்பாட்டு நிலை> புலம்பெயர்ந்தவர்களின் எழுத்து முயற்சிகள் ஆகியன குறித்துப் பேசினார்.

உரையின் இறுதியில் கலந்துரையாடல் இடம்பெற்றது. நன்றியுரையை எழுத்தாளர் ச. இராகவன் நிகழ்த்தினார்.

நிகழ்வின் படங்கள் சில