"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Saturday, January 15, 2011

அறிவோர் கூடல் - பொ. கருணாகரமூர்த்தியுடனான இலக்கியச் சந்திப்பு


பதிவும் படங்களும் - சு. குணேஸ்வரன்

இலக்கியச்சோலை து. குலசிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் அறிவோர் கூடல் 14.01.2011 வெள்ளிக்கிழமை பி. 4.00 மணிக்கு பருத்தித்துறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் புலம்பெயர் படைப்பாளிகளில் ஒருவராகிய பொ. கருணாகரமூர்த்தியுடனான (ஜேர்மனி) இலக்கியச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் தொடக்கவுரையை து. குலசிங்கம் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனதுரையில் இன்று வழக்கிழந்து வருகின்ற எமது கிராமியச் சொற்கள் பற்றி விரிவாகப் பேசினார். கருணாகரமூர்த்தி தனது படைப்புக்களில் இவ்வாறான கிராமியச் சொற்களை அநாயாசமாகவும்> புதிய சொற்களை கதாமாந்தர்களின் வாழ்வியலுக்கு ஏற்பவும் மிக இயல்பாகக் கையாள்வதை எடுத்துக் கூறினார். தமிழ்ப்படைப்புலகத்தில் கவனத்திற்குரிய படைப்பாளியாக தன்னை நிலைநிறுத்திவரும் கருணாகரமூர்த்தியின் கதைகளில் இருந்து சிலவற்றையும் எடுத்துக் காட்டிப்பேசினார்.

தொடர்ந்து கருணாகரமூர்த்தி பற்றிய அறிமுகவுரையை சு. குணேஸ்வரன் நிகழ்த்தினார். ‘ஒரு அகதி உருவாகும் நேரம்’ என்ற மூன்று குறுநாவல்களைக் கொண்ட தொகுதியுடன் தமிழத்திலும் ஈழத்திலும் கவனத்திற்குரிய படைப்பாளியாக மிளிர்ந்த கருணாகரமூர்த்தி கதைசொல்லும் பாணி நயக்கத்தக்கதாகவும்> புலம்பெயர் சமூகம் எதிர்கொள்கின்ற வாழ்க்கை முரண்களையும் பண்பாட்டு நெருக்குவாரங்களையும் எடுத்துக் காட்டுவதில் முதன்மை பெறுகின்றார் என்று குறிப்பிட்டார்.

நிகழ்வில் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘பதுங்குகுழி’ என்ற சிறுகதைத் தொகுப்பு மிக எளிமையாக வெளியிட்டு வைக்கப்பட்டது. நிகழ்வில் எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் நூலை வெளியிட்டு வைத்தார்.
தொடர்ந்து கருணாகரமூர்த்தி உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் தனது எழுத்துலக ஆரம்பம்> புலம்பெயர்ந்த இளைய தலைமுறைப் பிள்ளைகளின் தமிழ்மொழிப் பயில்கை> ஐரோப்பிய சமூகத்திற்கும் தமிழர் சமூகத்திற்கும் இடையில் இருக்கும் பண்பாட்டு நிலை> புலம்பெயர்ந்தவர்களின் எழுத்து முயற்சிகள் ஆகியன குறித்துப் பேசினார்.

உரையின் இறுதியில் கலந்துரையாடல் இடம்பெற்றது. நன்றியுரையை எழுத்தாளர் ச. இராகவன் நிகழ்த்தினார்.

நிகழ்வின் படங்கள் சில


6 comments:

 1. தகவலுக்கும் புகைப்படங்களுக்கும் நன்றி

  ReplyDelete
 2. குணேஸ்,
  இன்னும் விபரமாக எழுதவும்.கவிஞர் வதிரி கண.எதிர்வீரசிங்கம்
  அவர்களை காணவில்லையே?

  ReplyDelete
 3. வந்திருந்தார். கதவோரத்தில் இருந்ததால் விடுபட்டு விட்டார். நீங்கள் எழுதியபின்னர்தான் பார்த்தேன் ஆளைக் காணவில்லை. அது எனது தவறுதான்.

  நிகழ்வினை விரிவாக எழுத எனக்கும் ஆசைதான். நேரம்தான் பிரச்சினை. ஒரு சிலவற்றை பதிவு செய்து வைத்திருக்கிறேன். எதிர்காலத்தில் சாத்தியமாகலாம்.

  ReplyDelete
 4. இந்த நிகழ்வுக்கு நான் வருவதாக இருந்தேன்.கால நிலை சாதகமாக இருக்கவில்லை. நான் மதிக்கும்,விரும்பும் எழுத்தாளர்களில் நண்பர் கருணாகரமூர்த்தியும் ஒருவர்.அவரை மட்டுமல்லாமல் நான் நேசிக்கும் இதர எழுத்தாளர்களையும் சந்திக்கும் வாய்ப்பை இழந்தது மன வருத்தத்தை அளிக்கின்றது.

  ReplyDelete
 5. தகவல் அறிந்து கொண்டமை கண்டு மகிழ்ச்சி.

  ReplyDelete