"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Sunday, January 30, 2011

‘கயல்விழி’ யின் “உப்புக்காற்றில் மலர்ந்த மலர்கள்”

-கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா

பதிவும் படங்களும் : சு. குணேஸ்வரன்

யல்விழியின் ‘உப்புக்காற்றில் மலர்ந்த மலர்கள் ’ கவிதைத்தொகுதியின் வெளியீட்டு விழா 29.01.2011 சனிக்கிழமை வடமராட்சி இன்பர்சிட்டி பொதுநோக்கு மண்டபத்தில் இன்பர்சிட்டி க. கூ. சங்கத் தலைவரும் சமாதான நீதவானுமாகிய திரு வே விசுவலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் இலக்கியச்சோலை து. குலசிங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நூல் வெளியீட்டுரையினை நிகழ்த்தி நூலை வெளியிட்டு வைத்தார்.

நிகழ்வில் இன்பர்சிட்டி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு வே. செந்திவேல் வரவேற்புரையையும், யோகப்பயிற்சி ஆசிரியரும் வடமாகாண கராத்தே சங்கத் தலைவருமான மா. இரத்தினசோதி தொடக்கவுரையினையும் நிகழ்த்தினர்.

ஆசியுரைகளை மகாகணபதி சிவானந்தராஜாக்குருக்கள், பங்குத்தந்தை அகஸ்ரின் அடிகளார். சைவப்புலவர் இரத்தினசபாபதி திருமாறன் குருக்கள் ஆகியோரும், வாழ்த்துரைகளை கந்தவனம் சூரியகுமாரன், எழுத்தாளர் சீனா உதயகுமார் ஆகியோரும் நிகழ்த்தினர்.

நூலின் முதற்பிரதியை திரு மா. இரத்தினசோதி அவர்கள் பெற்றுக்கொண்டார். நூல் ஆய்வுரையினை வல்வை சிதம்பராக்கல்லூரி ஆசிரியர் திரு சோ. சிவனேஸ்வரன் நிகழ்த்தினார். ஏற்புரையினை நூலாசிரியர் அருமைத்துரை கயல்விழி நிகழ்த்தினார்.

நூலாசிரியர் கயல்விழி 1992 இல் பிறந்தவர். வடஇந்து மகளிர் கல்லூரியில் கலைப்பிரிவில் கல்வி கற்று வருகிறார். மிகச் சிறிய வயதில் கவிதைத்துறையில் ஆர்வம் கொண்டு நூலாக்கி வெளியிடும் முயற்சியை பலரும் பாராட்டினர். தொடர்ச்சியான வாசிப்பும் அனுபவமும் எதிர்காலத்தில் நல்ல தொகுப்புக்கள் வருவதற்குரிய வாய்ப்பை வழங்கும் என பேச்சாளர்கள் குறிப்பிட்டனர்.

இலக்கியப் பந்தம்பிடிப்பு எதுவுமில்லாத சாதாரண கிராம மக்கள் முன்னிலையில் மிக எளிமையாக நிகழ்ந்த இந்நூல் வெளியீடு எதிர்கால இளம் சந்ததியினர் மேலும் எழுத்துத்துறைக்குள் நுழைவதற்குரிய வாய்ப்பைக் கொடுக்கும் என எண்ணலாம்.

நிகழ்வின் படங்கள் சில

9 comments:

 1. தாயக இலக்கிய நிகழ்வுகள் பற்றிய விபரங்களை நாமும் அறிந்துகொள்ளும்விதமாக அடிக்கடி எழுதும் துவாரகன் அவர்களிற்கு நன்றிகள்.
  அம்பலத்தார்

  ReplyDelete
 2. குணேஸ்வரன் அவர்களே "இலக்கியப் பந்தம்பிடிப்பு "என்றபதம்புரியவில்லை .
  இலக்கியத்திற்காக பந்தம்பிடிக்கவேண்டிய அவசியமில்லை.விரும்பினால்பழகலாம்
  அல்லதுஒதுங்கிவிடலாம். பந்தம்பிடித்தல் என்பதை ஒருபடைப்பாளி சரியாக விபரிக்
  க வேண்டும்.
  அன்புடன்
  வதிரி.சி.ரவீந்திரன்

  ReplyDelete
 3. அட்டைப்படம் நன்றாக உள்ளது.வளரும் படைப்பாளிக்கு வாழ்த்துகள்.
  அன்புடன்
  வதிரி.

  ReplyDelete
 4. பகிர்வுக்கு நன்றி. குலசிங்கம், நீங்கள், சோதி அண்ணை எனப் பலரும் கலந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

  வெளியீட்டிற்கான அழைப்பிதழ் வேறு பல கடிதங்களுடன் இரண்டு நாட்களுக்கு முன் கிடைத்தது. நேரமின்மையால் இன்று காலைதான் திறந்து பார்த்தபோது குற்ற உணர்ச்சி ஆட்கொண்டது. ஒரு இளம் எழுத்தாளரது நூல் வெளியீட்டில் கலந்து கொள்வது சாத்தியப்படாது என்ற போதும் முகப் புத்தகத்திலாவது பகர்ந்திருக்கலாமே என்பதால்.

  எனது வாழ்த்துக்கள் உங்கள் ஊடாக அவருக்கும்.

  ReplyDelete
 5. பொன்னர் அம்பலத்தார், ரவி அண்ணா, டொக்டர், அனைவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 6. "இலக்கியப் பந்தம்பிடிப்பு எதுவுமில்லாத சாதாரண கிராம மக்கள் முன்னிலையில் மிக எளிமையாக நிகழ்ந்த இந்நூல் வெளியீடு எதிர்கால இளம் சந்ததியினர் மேலும் எழுத்துத்துறைக்குள் நுழைவதற்குரிய வாய்ப்பைக் கொடுக்கும் என எண்ணலாம்."

  இங்கு 'பந்தம்பிடிப்பு' என்பதை விபரிக்கவேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் நான் கொண்டுள்ள அர்த்தம்

  'சாரம் இல்லாத படைப்புக்களைத் தூக்கிப்பிடிப்பதும் கவனிக்கவேண்டிய படைப்புக்களை இருட்டடிப்புச் செய்து தட்டிக்கழிப்பதும்' (இதனை படைப்பாளிகளுக்கும் மாற்றிப் பார்க்கலாம்)

  மற்றும்படி இதில் விவாதிக்க எதுவுமில்லை ரவி அண்ணா.

  ReplyDelete
 7. குணேஸ்,
  இரசனை என்பது ஒரு சுவை.அது ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும்.எனவே
  சாரம் இல்லாதபடைப்பென்று ஒன்றையும் ஒதுக்கிவிடமுடியாது.சிலபுரியாதபடைப்பு
  கள் இருக்கின்றன.சிலபுரியும்படைப்புகள்இருக்கின்றன.இவற்றை புகழ்பவர்கள்
  பந்தப்பிடிப்புகாரரா?ஆகவே ரசனை வேறுபடும்.நான்விவாதிக்க வரவில்லை.
  அன்புடன்
  வதிரி.சி.ரவீந்திரன்.

  ReplyDelete
 8. கயல்விழியின் கவிதை நூல் வெளியீட்டுப் புகைப்படங்கள் கண்டேன். அவரின் முயற்சிக்கு வாழ்த்துகள். வெளிப்படுத்திய உங்களுக்கும் தான். நூலின் சில கவிதைகள் கிடைத்தால் எங்கள் வளரியில் வெளியிடலாம். கயல்விழியின் தொலைபேசி எண் கிடைக்குமா?

  ReplyDelete
 9. எனக்குத் தெரியாது. முடியுமானால் தொடர்பு கொள்ளுமாறு தகவல் கொடுக்கிறேன். உங்களின் மின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்பி வையுங்கள்

  ReplyDelete