"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Sunday, July 3, 2011

ஞானம் ஆசிரியருடன் ஒரு சந்திப்பு


பதிவு - சு.குணேஸ்வரன்

ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுடனான ஒரு சந்திப்பு 02.07.2011 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு வடமராட்சி கொற்றாவத்தையில் படைப்பாளி சீனா உதயகுமாரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

முன்னதாக நிகழ்வுக்கு சித்திரா சின்னராஜன் தலைமை வகித்தார். மிகச் சிறிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் ஞானம் சஞ்சிகையின் இன்றைய வருகையும் அதன் குறைபாடுகளை நிவர்த்தி செய்தலும் என்ற தொனிப்பொருளில் உரையாடல்கள் இடம்பெற்றன.

தமிழ்ப்படைப்புலகு இன்று புதிய திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. புதிய புதிய உத்தி, புதிய வடிவமைப்பு, என இன்றைய தமிழ்க்கலையுலகு நகர்ந்து கொண்டிருக்கிறது. கட்டுடைத்தல் போன்ற கோட்பாடுகளில் படைப்புக்கள் வெளியாகின்றன. ஆனால் எங்கள் படைப்பாளிகள் இவற்றை எவ்வளவு தூரம் கவனத்திற் கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக படைப்பாளிகள் வாசிப்பதே குறைவாக இருக்கிறது. ஆனால் தொடர்ச்சியான வாசகன் மிகத் தெளிவாக இருக்கிறான். என்று தனது உரையில் ஞானசேகரன் குறிப்பிட்டார்.

உரையாடலில் மிக முக்கியமாக பின்வரும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

1. தனிப்பட்ட நபர்கள் குறித்த அவதூறுகளை இலக்கியமாக்கி தம்மை இலக்கியவாதிகள் என கொண்டாடும் ஒரு நிலை உருவாகி வருகிறது. அதற்கு ஞானம் இடம்கொடுக்கிறது. சமூகத்திற்கு பிரயோசனமில்லாத, காலத்தைப் பிரதிபலிக்காத படைப்புக்களைப் பிரசுரிப்பது குறித்து ஞானம் கவனமெடுக்கவேண்டும்.

2. வாசகர் வட்டங்களை உருவாக்கி இதழ்கள் படைப்புக்கள் பற்றிய கருத்துப் பரிமாறலை செய்தல் வேண்டும்.

3. நேர்மையான விமர்சன மரபை வளர்த்தெடுக்க வேண்டும்.

இதுபோன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஞானம் ஆசிரியர் இக்கருத்துக்கள் தொடர்பாக தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். தமக்கு வந்துசேரும் படைப்புக்களைக் கொண்டே போட்டிக்குரிய படைப்புக்களைக்கூடத் தெரிவு செய்ய வேண்டிய நிலை இருப்பதாகவும்; இதழில் ஏற்படும் குறைபாடுகளைக் களைவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கருத்துப் பரிமாறலில் சித்திரா சின்னராஜன், சி.வன்னியகுலம், சு.குணேஸ்வரன், கி.நவநீதன், அ.அன்பழகன், வீ.வீரகுமார், சீனா உதயகுமார் ஆகியோர் பங்கெடுத்தனர். மேலும் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர். நன்றியுரையை வீ. வீரகுமார் நிகழ்த்தினார்.

(ஏற்கனவே திட்டமிடப்படாத ஒரு நிகழ்வாக அமைந்தபடியால் ஒளிப்படம் எடுக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை)

3 comments:

 1. தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள். நேர்மையான விமர்சனத்தை ஈழத்தில் எதிர்பார்ப்பது மடமைத்தனம் என்பது ஏனோ பலருக்கும் இன்றும் புரியவில்லை. கைலாசபதி தொடக்கி சிவசேகரம் வரை இந்த நேர்மையினம் தொடர்வது வருத்தத்துக்குரியது. ஞானம் ஆசிரியரால் இதற்கு எனதான் செய்ய முடியும்?

  ReplyDelete
 2. இன்று எழுதுபவர்கள் இலக்கியம் பேசுபவர்கள் மிகச் சிறிய வேலைகளில்கூட அந்த நேர்மையை வெளிப்படுத்தலாம் அல்லவா?

  உதாரணத்திற்கு நூல் அறிமுகத்தில், விமர்சனத்தில், நல்ல படைப்புக்களை இனங்காட்டுதலில், குறைபாடுகளை நாகரீகமாக சுட்டிக்காட்டுதலில் ... இவ்வாறாக

  ReplyDelete
 3. //தனிப்பட்ட நபர்கள் குறித்த அவதூறுகளை இலக்கியமாக்கி தம்மை இலக்கியவாதிகள் என கொண்டாடும் ஒரு நிலை உருவாகி வருகிறது. அதற்கு ஞானம் இடம்கொடுக்கிறது. சமூகத்திற்கு பிரயோசனமில்லாத, காலத்தைப் பிரதிபலிக்காத படைப்புக்களைப் பிரசுரிப்பது குறித்து ஞானம் கவனமெடுக்கவேண்டும்.//
  எனது அறிவுக்கு எட்டியவரை ஞானத்தில் கலாநிதி த. கலாமணியும் கொர்றைப் பி . கிருஷ்ணானந்தனும் தான் தனிப் பட்ட அவதூறுகளை பொழிந்தார்கள். அதை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறீர்கள் . ஏன்?

  ReplyDelete