நன்றி Thonma Yathirai - தொன்ம யாத்திரை
5 August at 08:19 ·
ஆவணப்படம் திரையிடல்
வசீகரன் சுசீந்திரகுமாரின் இயக்கத்தில் உருவான ”கரும்பவாளி” ஆவணப்படத்தின் திரையிடல் நேற்று (ஓகஸ்ட் 4, 2018) மாலை யாழ்ப்பாண பொதுசன நூலக குவிமாட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
உடுப்பிட்டிப் பகுதியில் இருநூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த வீராத்தை எனும் பெண் அந்தக் கிராமத்திற்கு கேணிகளையும் ஆவுரஞ்சிக் கற்களையும் தண்ணீர்ப்பந்தலையும் தானங்களாக அமைத்துக் கொடுத்துள்ளார். மந்தை வளர்ப்பை வாழ்வாதாரமாகக் கொண்ட அந்தக் கிராமத்தின் மக்களுக்காக வீராத்தை செய்திருக்கும் பணிகளையும், அதைக் குறித்ததாக அந்தக் கிராமத்தில் நிகழும் வாய்மொழி வழக்காறுகளையும் ஆய்வு ரீதியிலான தகவல்களையும் திரட்டி ஆவணமாக்கும் முயற்சியே கரும்பவாளி என்கிற இந்த ஆவணப்படம். இந்த ஆவணப்படத்தின் சிறப்புப்பிரதியினை கி.சுசீந்திரகுமார் அவர்கள் எழுத்தாளரும் கலை இலக்கியச் செயற்பாட்டாளருமான அ. யேசுராசா அவர்களுக்கும் கலாநிதி சு.குணேஸ்வரன் அவர்களுக்கும் இந்நிகழ்வில் வழங்கி திரையிடலினை ஆரம்பித்துவைத்தார்.
நமது மரபுரிமைகளைப் பேணவும் ஆவணப்படுத்தவும் அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தவுமான பயணத்தின் ஒரு கீற்றை இந்த ஆவணப்படத்தின் மூலம் நமது சமூகத்திற்குள் உரையாடலுக்குக் கொண்டு வரும் முயற்சியாக கரும்பவாளி ஆவணப்படத்தின் திரையிடல் இடம்பெற்றது. வரலாற்றின் அடிப்படையிலும் பண்பாட்டின் அடிப்படையிலும் பல்வேறு அழித்தொழிப்புகளை எதிர்கொள்ளுகின்ற சமகாலச் சூழலில் கரும்பவாளி போன்ற ஆவணப்படங்களின் வருகை முக்கியமானதாகும். மரபுரிமைகள் பற்றிய கரிசனையுடன் இயங்கிவருகின்ற தொன்ம யாத்திரை அமைப்பும், திரைப்படங்கள் மற்றும் ஈழத்துத் திரைப்படங்கள் குறித்த கரிசனையுடன் இயங்குகின்ற நிகழ்படம் அமைப்பினரும் இணைந்து இந்நிகழ்வினை ஒருங்கிணைத்திருந்தனர்.
No comments:
Post a Comment