"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Thursday, April 14, 2011

அன்புக்கரம் கொடுப்போம் - உதவித்திட்ட நிகழ்வு
சுவிஸ் சூரிச் சிவன்கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்புக்கரம் கொடுப்போம் நிகழ்ச்சித்திட்டத்தின் தொடர் பணிகளில் ஒரு நிகழ்வு 14.04.2011 புதுவருட தினத்தன்று மாலை 5.30 மணிக்கு கொற்றாவத்தை பூமகள் சனசமூக நிலைய மண்டபத்தில் திரு அ.அருளானந்தசோதி (தபாலதிபர், கரவெட்டி) தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் கனடாவில் வதியும் திரு திருமதி ஈசன் அவர்கள் புதுவருட தினத்தை முன்னிட்டு 5 பயனாளிகளுக்கு உதவியை வழங்கியுள்ளார்.

நிகழ்வில் முரளிதரன் கோமதி (அரியாலை), கஜந்தன் நிஷாந்தினி (வரணி) ஆகியோருக்கு தையல் இயந்திரங்களும்; திருமதி தியாகராசா சசிகலா (அரியாலை, கோழி வளர்ப்பிற்கு ரூபா இருபத்தையாயிரம்), நவரத்தினராசா ரூபா(விசுவமடு, பழக்கடை வைப்பதற்கு ரூபா இருபதினாயிரம்),விக்னேஸ்வரன் ரூபா (திருகோணமலை, ஆடு வளர்ப்பிற்கு ரூபா இருபத்தையிரம்) ஆகியோருக்கு சுயதொழில் செய்வதற்குரிய உதவித் தொகைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் சு. குணேஸ்வரன் (ஆசிரியர்) கலந்து கொண்டார். நன்றியுரையை பயனாளிகளில் ஒருவராகிய நவரத்தினராசா ரூபா வழங்கினார்.

தேவையறிந்து செயற்படும் மேற்படி சுவிஸ் சூரிச் சைவத்தமிழ் சங்கமும் அதனோடு இணைந்து உதவியைச் செய்த திரு திருமதி ஈசன் (கனடா) அவர்களும் நன்றிக்குரியவர்கள். இதுபோன்ற நல்ல செயற்பாடுகள் இடம்பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.

பதிவு – சு. குணேஸ்வரன்.Wednesday, April 13, 2011

வாழ்வகத்திற்கு பிறெய்லி அகராதி கையளிப்பு நிகழ்வு
படங்களும் பதிவும் - சு.குணேஸ்வரன்

க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் ‘வாழ்வகம்’ இல்லத்திற்கு இலவசமாக வழங்கப்பட்ட க்ரியா பிறெய்லி அகராதி கையளிப்பு நிகழ்வு கடந்த 10.04.2011 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு இடம்பெற்றது. மேற்படி நிகழ்வு யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் அமைந்திருக்கும் வாழ்வகம் (விழிப்புல வலுவிழந்தோர் இல்லம்) இல்ல மண்டபத்தில் அதன் தலைவர் ஆ. ரவீந்திரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
மிகப் பெறுமதியான பிறெய்லி அகராதியின் 53 பாகங்கள் கொண்ட தொகுப்பினை தமிழ்நாடு க்ரியா பதிப்பகத்தின் ராமகிருஷ்ணன் அவர்கள் க்ரியாவின் நிறுவுனர்களில் ஒருவராகிய காலஞ்சென்ற வி.ஜெயலட்சுமியின் பிறந்தநாளைக் குறிக்கும் முகமாக வழங்கியுள்ளார்.

மேற்படி நிகழ்வில் ராமகிருஷ்ணன் அவர்களுடன் இணைந்து ‘க்ரியாவின் தற்காலத் தமிழகராதி’ தொகுப்பில் இலங்கைச் சொற்கள் 1700 இடம்பெற பங்கெடுத்தவரும் ராமகிருஷ்ணனின் நட்புக்குரியவருமான இலக்கியச்சோலை து. குலசிங்கம் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக பிறெய்லி அகராதியை வாழ்வகத் தலைவர் ரவீந்திரன் அவர்களிடம் கையளித்தார்.

மேற்படி நிகழ்வில் து. குலசிங்கம், சுன்னாகம் பொதுநூலகர் செளந்தரராஜன், கவிஞர் வதிரி கண எதிர்வீரசிங்கம், பா.துவாரகன், வாழ்வக மாணவன் க.கலைச்செல்வன், டாக்டர் வெ. நாகநாதன், வாழ்வக உதவிச் செயலாளர் v.k.ரவீகரன் ஆகியோர் மங்களவிளக்கேற்றினர்.

இறைவணக்கப்பாடலை வாழ்வகம் இல்ல மாணவன் கு.ஜெயதீசன் அவர்கள் இசைத்தார்.

தொடர்ந்து ரவீந்திரன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் வாழ்வகத்தின் தோற்றம் அதன் வளர்ச்சி இல்லப்பிள்ளைகளின் கல்விநிலை ஆகிய பற்றிக் குறிப்பிட்டு இந்த அகராதி சுலபமாக கிடைக்கக்கூடியதல்ல. இன்று க்ரியா ராமகிருஷ்ணன் அவர்கள் பெருமனதோடு வழங்கியிருக்கிறார். எங்கள் வாழ்வகப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு மிகப்பெறுமதியான ஓர் உதவியைச் செய்திருக்கிறார். அவருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். என்று குறிப்பிட்டார்.

குலசிங்கம் அவர்கள் பேசும்போது “ராமகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு சந்தர்ப்பத்தில் கதைக்கும்போது இவ்வாறான பிறெய்லி அகராதி பதிப்பு வரவுள்ள செய்தி அறிந்துகொண்டேன். அப்போது நீங்கள் எங்களுக்கு ஏதாவது செய்யலாமே என்று கேட்டபோது பிறெய்லி அகராதி தேவைப்படும் நிறுவனங்களிடமிருந்து வேண்டுகைக் கடிதங்களைப் பெறவிரும்பியிருந்தார். இதற்குரிய வேண்டுகைக் கடிதங்களை கரிசனையுடன் பா.துவாரகன் பெற்றுத் தந்தார். க்ரியாவின் நிறுவுனர்களில் ஒருவராகிய காலஞ்சென்ற வி.ஜெயலட்சுமியின் பிறந்தநாளைக் குறிக்கும்முகமாக சுன்னாகம் ‘வாழ்வகம்’ பார்வையற்றோர் இல்லத்திற்கு கொடுப்பதே பொருத்தமானது என ராமகிருஷ்ணன் முடிவுசெய்து 52 தொகுதிகள் உள்ளடங்கிய பிறெய்லி அகராதியை கொடுத்துதவியிருக்கிறார். உண்மையில் நல்ல ஒரு காரியம். தேவைப்படும் இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. ராமகிருஷ்ணன் என்றும் நன்றிக்குரியவர்” என்று குறிப்பிட்டார்.

மேலும் உரைகளை சுன்னாகம் பொதுநூலகர் செளந்தரராஜன், பா.துவாரகன் ஆகியோர் நிகழ்த்தினர். நன்றியுரையினை வாழ்வக உதவிச் செயலாளர் v.k ரவீகரன் நிகழ்த்தினர். இந்தச் செயற்பாட்டுக்கு உதவியதற்காக இலக்கியச்சோலை து. குலசிங்கம் அவர்களுக்கு சுன்னாகம் பொதுநூலக நூலகர் திரு செளந்தரராஜன் அவர்கள் மாலையிட்டு பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார்.

மிக எளிமையாக இல்ல மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வு மனதிற்கு மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் இருந்தது.

பிறெய்லி அகராதி நூலில் இணைக்கப்பட்டிருக்கும் வாசகம்


வாழ்கவம் நிறுவுனர் அன்னை அன்னலட்சுமி சின்னத்தம்பி உருவச்சிலை


வாழ்வகம் தலைவர் ஆ.ரவீந்திரன் தலைமையுரை


சுன்னாகம் பொதுநூலகர் செளந்தரராஜன்


கவிஞர் வதிரி கண எதிர்வீரசிங்கம்


வாழ்வக உதவிச் செயலாளர் ரவீகரன்


டாக்டர் வெ. நாகநாதன்


வாழ்வக மாணவன் க.கலைச்செல்வன்


வாழ்வக மாணவன் கு.ஜெயதீசன்

சுன்னாகம் பொதுநூலக நூலகர் செளந்தரராஜன்

பா.துவாரகன்


இல்லத்தலைவரிடம் நூலைக் கையளிக்கும் இலக்கியச்சோலை து.குலசிங்கம்

க்ரியா ராமகிருஷ்ணனின் பிறெய்லி அகராதி வழங்கப்பட்டசெய்தியை வாசிக்கும் வாழ்வகத்தலைவர் ஆ. ரவீந்திரன் அருகில் பா.துவாரகன்


மாலையிட்டு பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்படும்
இலக்கியச்சோலை து.குலசிங்கம்

து. குலசிங்கம்


வாழ்வக உதவிச் செயலாளர் ரவீகரன் நன்றியுரைபிறெய்லி அகராதியுடன் வாழ்வக மாணவர்கள்


வாழ்வக மாணவர்களுடன் நிகழ்வில் கலந்து கொண்டோர்.


படங்களும் பதிவும் - சு.குணேஸ்வரன்/ kuneswaran@gmail.comSaturday, April 9, 2011

பருத்தித்துறை அறிவோர் கூடல்


பதிவும் படங்களும் - சு. குணேஸ்வரன்

இலக்கியச்சோலை து. குலசிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் மாதாந்தம் நடைபெற்றுவரும் அறிவோர் கூடல் நிகழ்வில் மருத்துவத்துறை சார்ந்த கலந்துரையாடல் ஒன்று கடந்த 03.04.2011 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் இரண்டு கருத்துரைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

‘கதிர்ப்புகலும் அதன் மருத்துவப் பயன்பாடும்’ என்ற பொருளில் மருத்துவப் பெளதீகவியலாளர் ஜெயசுதன் அவர்கள் உரையாற்றினார். தொடர்ந்து டாக்டர் நாகநாதன் அவர்களின் ‘எயிட்ஸ்’ பற்றிய விபரணப்படம் மற்றும் கருத்துரையும் இடம்பெற்றது.

முன்னதாக து. குலசிங்கம் அவர்களின் தொடக்கவுரையுடனும் பா.துவாரகன் அவர்களின் அறிமுகவுரையுடனும் நிகழ்வு ஆரம்பமாகியது.

ஜெ. ஜெயசுதன் அவர்கள் தனது கருத்துரையின்போது மல்ரிமீடியா உதவியுடன் விளக்கத்தை வழங்கி தனது உரையை நிகழ்த்தினார். மருத்துவத்துறையில் கதிர்வீச்சின் பயன்பாடு என்ற பிரதான விடயத்தின்கீழ் கதிர்வீச்சு, அண்மையில் ஜப்பானில் இடம்பெற்ற சுனாமியுடன் தொடர்ந்த அணுக்கசிவு ஆகியனவும்; மருத்துவத்துறையில் புற்றுநோய்ச் சிகிச்சையில், புற்றுநோய் உருவாக்கத்தின் தூண்டுதலில் பங்களிப்புச் செய்யும் உணவு தொடர்பான காரணிகள் ஆகியன தொடர்பாகவும் இன்றைய தொடர்பாடலில் பங்களிப்புச் செய்யும் கதிர்வீச்சு, அது மனிதனில் ஏற்படுத்தும் பாதிப்பு என்பன பற்றியும் பேசினார்.

அடுத்து டாக்டர் வெ. நாகநாதன் அவர்களின் “ஊடுருவும் உயிர்க்கொல்லி” என்ற ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து எயிட்ஸ் நோய்க்கொல்லி பற்றியும் இன்றைய நமது சமுதாயப்போக்குப் பற்றியும் விரிவாக விளக்கமளித்தார்.

இறுதியாக சபையோர் கலந்துரையாடலுடன் நிகழ்வு நிறைவு பெற்றது. இலக்கியம் சார்ந்த உரையாடல்களுக்கு அப்பால் மருத்துவம் சார்ந்து தெரியாத பல விடயங்களை அறிந்து கொள்ளக்கூடியதாக பயனுள்ள ஒரு சந்திப்பாக மேற்படி நிகழ்வு அமைந்திருந்தது.

டாக்டர் நாகநாதன் அவர்களின் விபரணப்படத்தினை பின்வரும் இணைப்பினூடாக பார்க்கமுடியும்.(http://www.youtube.com/watch?v=DhvkRMg-oWA&feature=player_embedded#at=13)

(டாக்டர் வெ. நாகநாதன் அவர்களின் வலைப்பதிவு http://savaale.blogspot.com/)


உரையாளர்கள்