"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Thursday, August 30, 2012

நீயுருட்டும் சொற்கள்

கவிதைத்தொகுதி வெளியீடு   
ந. மயூரரூபன்
ந. மயூரரூபனின் ‘நீயுருட்டும் சொற்கள்’ என்ற கவிதைநூல் வெளியீட்டு விழா 26.08.2012 நெல்லியடி தடங்கன்புளியடி முருகமூர்த்தி ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.   
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வரவேற்புரையை த. அஜந்தகுமாரும், வெளியீட்டுரையை துவாரகனும், விமர்சன உரைகளை சித்தாந்தன் மற்றும் ஈ.குமரன் ஆகியோரும் நிகழ்த்தினர்.
ஏற்புரையை நூலாசிரியர் மயூரரூபன் நிகழ்த்தினார்.
தொகுப்பிலிருந்து ஒரு கவிதை
இக்குழந்தை
நிலத்தை மிதிக்கும் இருள்தான்
இவளது கூடாரத்தையும்
தன்னிடுப்பில் சொருகியிருக்கிறது. 
ஒளித்துண்டுகளைப்
பொறுக்குகிறது இக்குழந்தை.
மின்மினிகளையும்
கைகளில் பொத்தி
தன் வீட்டுள் எறிகிறது.
ஒளித்துண்டுகளும் மின்மினிகளும்
ஈரங்குழைந்த
கூடாரமண்ணுள் விழுகின்றன. 
குழந்தையை விளையாடும்
பசியின் முளைகள்
மின்னுமவற்றைக் குத்துகின்றன.
குழந்தையின் கதகதப்பின் எச்சம் மட்டுமே
முளைகளில்
துடித்தபடியிருக்கிறது.
பயந்தோடுமந்த
ஒளிப்புள்ளிகளைப் பார்த்து
நாத்தொங்கிய நாய்
ஊளையிட்டுப் படுக்கிறது.
தானெறிந்த ஒளிக்குஞ்சுகளை
தன் கூடார வீட்டுள் காணாத
இக்குழந்தையின் சிறுபுன்னகையும்
பிய்ந்து போகிறது.
தன்வீடு
கசிந்துவிடும் ஈரத்துடன்
நிலத்திலிருந்து அழுகிறது குழந்தை…
நாய் தலையுயர்த்திப் பார்க்கிறது.
----   நிகழ்வில் இருந்து சில படங்கள் 
த. அஜந்தகுமார் - வரவேற்புரை 
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் - தலைமையுரை 
துவாரகன் - வெளியீட்டுரை  
விரிவுரையாளர் ஈ. குமரன் - மதிப்பீட்டுரை 
 சித்தாந்தன் - மதிப்பீட்டுரை 

Wednesday, August 29, 2012

நூல் வெளியீட்டு விழா


“சந்நிதியான் அற்புதங்கள்”
(நூலை நகரபிதா ந. அனந்தராஜ் வெளியிட்டு வைக்க அதனை வீ.இ. வடிவேற்கரசன் பெற்றுக்கொள்கிறார். அருகில் நூலாசிரியர் ந.அரியரத்தினம்.)

திரு ந. அரியரத்தினம் எழுதிய “சந்நிதியான் அற்புதங்கள்” (மூன்றாம் பாகம்) நூலின் வெளியீட்டு விழா 29.08.2012 புதன் மாலை 6.00 மணியளவில் தொண்டைமானாறு செல்வச்சந்நிதியில் அமைந்திருக்கும் ‘செல்லையாஐயர் அன்னதான கலாசார மண்டபத்தில்’ இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வு அதிபர் திரு கு. இரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.  திரு குமாரசாமிஐயர் வாழ்த்துரையினையும், திரு வீ.இ. வடிவேற்கரசன், மற்றும் ஓய்வுபெற்ற அதிபர் திருமதி சுரேந்திரநாதன் ஆகியோர் கருத்துரைகளை நிகழ்த்தினர்.நிகழ்வில் நூலின் வெளியீட்டுரையை வல்வெட்டித்துறை நகரபிதா திரு ந. அனந்தராஜ் அவர்கள் நிகழ்த்தினார்.

நூலாசிரியர் திரு ந. அரியரத்தினம் அவர்கள் (தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய முன்னாள் அதிபர் மற்றும் ஓய்வுபெற்ற கோட்டக்கல்வி அதிகாரி - வவுனியா வடக்கு) ஏற்புரையினையும்; திரு ந. சிவரத்தினம் அவர்கள் நன்றியுரையினையும் நிகழ்த்தினர்.

பதிவும் படங்களும் : சு. குணேஸ்வரன்
நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்