"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Saturday, September 12, 2020

மணற்கேணியின் “ஆய்வு உலா” உரைத்தொடரில் இலங்கையரின் ஆய்வுரைகள்

 தமிழாய்வில் பெரும் பங்களிப்பைச் செய்துவரும் மணற்கேணிஆய்விதழ் நடத்தவிருக்கும் ஆய்வு உலாஇணையவழி ஆய்வுரைத் தொடரில் ஈழத்து ஆய்வாளர்களின் ஆய்வுரைகளும் இடம்பெற உள்ளன. இந்த ஆய்வரங்கு 13.09.2020 அன்று ஆரம்பமாகிறது. இது தொடர்பான அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

13.09.2020 முதல் 28.09.2020 வரையான காலப் பகுதியில், தினமும் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ள இந்த உரையரங்கில் தினமும் ஓர் ஆராய்ச்சியாளர் உரை நிகழ்த்த உள்ளார். இந்த ஆய்வுரைத் தொடரில் இலங்கை மற்றும் இந்தியாவிலருந்து பங்குபற்றும் 16 ஆய்வாளர்கள் பல்வேறு பொருண்மைகளில் ஆய்வுரை நிகழ்த்த உள்ளனர்.

இலங்கையிலிருந்து ஐவர் இத்தொடரில் உரையாற்றுகிறார்கள். த. அஜந்தகுமார் (யாழ்ப்பாணம் ஆழியவளை, இலங்கைத் திருச்சபைத் தமிழ்க் கலவன் வித்தியாலயம்) இலங்கைத் தமிழ்ப் பெண்  படைப்பாளிகளின் சிறுகதைகள் - சமூக நோக்கு எனும் தலைப்பில் 15.09.2020 அன்றும், இரா. இராஜேஸ்கண்ணன் ( சிரேஷ்ட விரிவுரையாளர், சமூகவியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) மதச்சார்புக் கல்வியும் சமூக அசைவியக்கமும் - பின்காலனிய யாழ்ப்பாணத்துச் சமூக உருமாற்றமும் பற்றிய ஓர் உசாவல் எனும் தலைப்பில் 18.09.2020 அன்றும், க.ஜெயதீஸ்வரன் (விரிவுரையாளர் வரலாற்றுத் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்) யாழ்ப்பாண அரசிற்கும் தென்னிலங்கை அரசுகளுக்கும் இடையிலான அரசியல் உறவு - ஒரு வரலாற்றுப் பார்வை எனும் தலைப்பில் 22.09.2020 அன்றும், மார்க்கண்டன் ரூபவதனன் (பொதுசன நிருவாகத் துறைத் தலைவர், ஊவா வெல்லஸ்ஸப் பல்கலைக்கழகம்) ஆர்ணல்ட் சதாசிவம்பிள்ளையின் தமிழியற் பணிகள் எனும் தலைப்பில் 24.09.2020 அன்றும், கலாநிதி  சு. குணேஸ்வரன் (யாழ்ப்பாணம் - தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மாகா வித்தியாலயம்) புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் நாவல்கள் ஒரு நுண்ணாய்வு எனும் தலைப்பில் 27.09.2020 அன்றும் உரை நிகழ்த்துகின்றனர். 

       

இந்திய - இலங்கை ஆய்வாளர்கள் கலந்துகொள்ளும் இந்த உரைத்தொடரில் தினமும் உரை நிகழ்வு நிறைவுற்றதும் உரையாளருடன் ஆய்வு மாணவர்கள் கலந்துரையாடலையும் நிகழ்த்த உள்ளனர். இந்த உரையாடல் நிகழ்வில் இலங்கையிலிருந்து வி. விமலாதித்தன், எ. அனுசாந்தன், த. அருண்விழி ஆகியோர் இந்திய மாணவர்களுடன் இணைந்து பங்கேற்க உள்ளனர். மணற்கேணி ஆய்விதழின் ஸ்தாபகரும் பல்துறை ஆய்வாளருமான கலாநிதி து. ரவிக்குமாரின் நெறிப்படுத்தலில் கலாநிதி செ. சுதர்சன் (இலங்கை), கலாநிதி சு. தேன்மொழி (தமிழ்நாடு) ஆகியோர் இந்த இணையவழி ஆய்வுரைத் தொடரின் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயற்பட்டுள்ளனர்.

கலாநிதி தே. வீ. சுமதி, த. ஜீவராசா, கோ. மணிகண்டன் ஆகியோர் உரை நிகழ்ச்சிகளை இணையவழியாக zoom மென்பொருள் மூலம் ஒழுங்கமைத்து வழங்குகின்றனர். ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் ஆகிய அனைவரையும் இந்த உரைத்தொடரில் இணையவழிப் பார்வையாளராக இணைந்து சிறப்பிக்குமாறு மணற்கேணி ஆய்வு இதழ் அழைப்புவிடுத்துள்ளது. மாணவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் 13.09.2020 முதல் 28.09.2020 வரை தினமும் இரவு 7 மணிக்கு உரை நிகழ்வு ஆரம்பமாகும் என்றும் அறிவித்துள்ளது. இணையவழி zoom மென்பொருள் மூலம் 5012349855 எனும் அடையாளக் குறியீட்டு எண்ணையும் MKENI எனும் திறவுச் சொல்லைம் பயன்படுத்தி (ID:5012349855, Passcode:MKENI) ஆய்வு உலாவில் பங்குபற்றலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 







Sunday, August 30, 2020

கோ. கைலாசநாதனின் ஓவியங்கள் பற்றிய உரையாடல்

 


“உணர்தல் மற்றும் பதிவுசெய்தல்” என்னும் தலைப்பில் ஓவியர் கோ. கைலாசநாதனின் ஓவியங்கள் பற்றிய உரையாடல் 30.08.2020 ஞாயிறு காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் நல்லூரில் சமகால கலை கட்டடக்கலை மற்றும் வடிவமைப்புக்கான இலங்கை ஆவணக் காப்பகத்தில் நடைபெற்றது. மேற்படி உரையாடலில் தா. சனாதனன் அவர்கள் நிகழ்ச்சியை நெறியாள்கை செய்து ஓவியர் கோ. கைலாசநாதனின் கலைச்செயற்பாடு பற்றி உரைநிகழ்த்தினார். கைலாசநாதனின் தெரிவுசெய்யப்பட்ட ஓவியங்கள் திரையில் காட்சிப்படுத்தப்பட்டு அந்த ஓவியங்களை வரைவதற்கான உணர்வுநிலை மற்றும் அவை பற்றி தனது கருத்துநிலை ஆகியவற்றையும் கோ. கைலாசநாதன் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து உரையாடலில் கலந்து கொண்டவர்களின் கருத்துக்களும் பரிமாறப்பட்டன.








Friday, August 21, 2020

‘திருக்கரம்’ வெளியீடு

 

வடமராட்சி தெற்கு மேற்கு கரவெட்டி பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் திருக்கரம் ஆக்க இலக்கிய மலர் வெளியீடு 21.08.2020 மாலை 3.30 மணிக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலரும் கலாசாரப் பேரவையின் தலைவருமாகிய திரு . தயாரூபன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மங்கள விளக்கேற்றலைத் தொடந்து வரவேற்புரையை கலாசாரப் பேரவை நிர்வாக உறுப்பினர் திரு . பாலன் அவர்களும் வாழ்த்துரையை கலாசாரப் பேரவை பொருளாளர் திரு இன்பரூபன் அவர்களும் நிகழ்த்தினர்.

மூத்த எழுத்தாளர் குப்பிழான் . சண்முகன் வெளியீட்டுரையை நிகழ்த்தினார். நூலின் முதற்பிரதியை கணக்காளர் திரு எஸ் சுதர்சன் அவர்கள் வழங்கி வைத்தார். இலக்கிய மலர் தொடர்பான உரையை யாழ் பல்கலைக்கழக சமூகவியற்றுறை சிரேஸ்ட விரிவுரையாளர் திரு . இராஜேஸ்கண்ணனும் ஏற்புரையை இணை இதழாசிரியர்களில் ஒருவராகிய கலாநிதி சு. குணேஸ்வரனும் நிகழ்த்தினர். நன்றியுரையை கலாசாரப் பேரவை உபதலைவர் கலாபூஷணம் கண.எதிர்வீரசிங்கம் நிகழ்த்தினார்.

கடந்த தலைமுறையினரின் வாழ்வியலை வெளிப்படுத்தும் அழகான ஓவியத்தை அட்டையில் தாங்கி (ஓவியர் கோ. கைலாசநாதன்) திருக்கரம் மலர் வெளிவந்துள்ளது.





























 

Tuesday, July 7, 2020

ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் 'சந்திரகாவியம்' நூல் வெளியீடும்



அமரர் க.வ சிவச்சந்திரதேவன் அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் 'சந்திரகாவியம்' நூல் வெளியீடும் அண்மையில் இடம்பெற்றது.

வடமராட்சி சுருக்கெழுத்துக் கழக நிறுவுநர் க. வ. சிவச்சந்திரதேவன் அவர்களின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 05.07.2020 பகல் அன்னாரின் உடுப்பிட்டி இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அன்னாரின் நினைவுகளின் ஆவணப் பதிவாகிய ' சந்திரகாவியம்' என்னும் நூலும் வெளியிடப்பட்டது. நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்களைத் தருகிறோம். நூலில் இடம்பெற்றுள்ள நினைவுக்குறிப்புக்களை கீழ்க்காணும் இணைப்பில் வாசிக்கமுடியும்.
https://chandrakaaviyam.blogspot.com/p/blog-page.html
(படங்கள் : சஜிஷ்ணவன், லக்சி, குணேஸ்)