"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Wednesday, October 28, 2009

அலைவும் உலைவும் - நூல் வெளியீடுசு. குணேஸ்வரனின் ‘அலைவும் உலைவும்’ என்ற புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியீடு கடந்த 18.10.2009 ஞாயிறு, காலை 9.00 மணிக்கு யா/தேவரையாளி இந்துக் கல்லூரி திறந்தவெளி அரங்கில் பருத்தித்துறை ப.நோ.கூ. சங்க வர்த்தக முகாமையாளரும் இலக்கிய ஆர்வலருமான திரு வே. பரமானந்தம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வானது, குணேஸ்வரனின் பெற்றோர் திரு திருமதி சுப்பிரமணியம் கமலாதேவி மற்றும் வடமராட்சி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ்) திருமதி சுதாமதி நந்தபாலன், யா/தேவரையாளி இந்துக் கல்லூரி அதிபர் திரு எம். நவநீதமணி, எழுத்தாளர் ஆர். இரத்தினசேகரன், சமூக முன்னோடி திரு மு. இரத்தினம் ஆகியோரின் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாவினை தேவரையாளி இந்துக் கல்லூரி மாணவிகள் இசைத்தனர். வரவேற்புரையினை யா/அம்பன் அ.மி.த.க பாடசாலை ஆசிரியர் திரு சு. மகாதேவா அவர்கள் நிகழ்த்தினார். வாழ்த்துரைகளை மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் தெணியான் மற்றும் இலக்கியச்சோலை து. குலசிங்கம் ஆகியோர் நிகழ்த்தினர்.


நூலின் வெளியீட்டுரையினை யாழ். பல்கலைக்கழக கல்வியியற்றுறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி த. கலாமணி நிகழ்த்தினார். நூல் மதிப்பீட்டுரைகளை யாழ் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் திரு இரா.இராஜேஸ்கண்ணன், தமிழ்த்துறை உதவி விரிவுரையாளர் திரு த. அஜந்தகுமார் ஆகியோர் நிகழ்த்தினர்.

நூலின் முதற்பிரதியை யா/அம்பன் அ.மி.த.க பாடசாலை அதிபர் திரு. பொ. சிவராசா அவர்கள் பெற்றுக்கொண்டார். நன்றியுரையினை நெல்லியடி ஜனசக்தி காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த திரு சு. ஞானேஸ்வரன் நிகழ்த்தினர். ஏற்புரையை நூலாசிரியர் திரு சு. குணேஸ்வரன் நிகழ்த்தினார்.

நிகழ்வின் பதிவுகள்


மங்கல விளக்கேற்றும் விருந்தினர்கள்

தமிழ்த்தாய் இசைக்கும் மாணவிகள் மற்றும் தலைமையுரை நிகழ்த்தும் வே. பரமானந்தம், வரவேற்புரை நிகழ்த்தும் சு.மகாதேவா, நன்றியுரை நிகழ்த்தும் சு.ஞானேஸ்வரன்

வாழ்த்துரைகளை நிகழ்த்தும் மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் தெணியான் அவர்களும் இலக்கியச் சோலை து. குலசிங்கம் அவர்களும்.

வெளியீட்டுரை நிகழ்த்தும் கலாநிதி த. கலாமணி அவர்கள்நூலின் முதற்பிரதியை கலாநிதி த. கலாமணி அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் அதிபர் பொ. சிவராசா. நடுவில் நூலாசிரியர் சு. குணேஸ்வரன்மதிப்பீட்டுரை நிகழ்த்தும் இரா. இராஜேஸ்கண்ணன் மற்றும் த. அஜந்தகுமார்ஏற்புரை நிகழ்த்தும் நூலாசிரியர் சு. குணேஸ்வரன்


நிகழ்வில் கலந்து கொண்டோர்

Thursday, October 8, 2009

தமிழ் இலக்கிய விழா – 2009

பதிவு - 4

இலங்கை வடமாகாணம் கல்வி அமைச்சு பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்தும் தமிழ் இலக்கிய விழா ஒக்டோபர் 8,9,10 ஆந் திகதிகளில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

மூன்று தினங்கள் இடம்பெறும் இவ் இலக்கிய விழாவில் ஆய்வரங்கு, நடனம், நாடகம், பண்பாட்டுப் பேரணி என்பன இடம்பெறவுள்ளன.

ஆய்வரங்கில் ஈழத்து தமிழ் இலக்கியம், யாழ்ப்பாணத் தமிழ்மன்னர் காலம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு கட்டுரைகள் வாசிக்கப்படவுள்ளன.

முதல் நாள்
8ஆம் திகதி காலை 9.00 மணிக்கு ‘ஏ.ஜே கனகரத்தினா’ அரங்கில் நிகழும் ஆய்வரங்கிற்கு பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் தலைமை வகிக்கிறார்.

‘இலக்கியமும் தேசியமும்’ என்ற பொருளில் விரிவுரையாளர் ஈ. குமரன் அவர்களும் ‘இலக்கியமும் சமயமும்’ என்ற பொருளில் விரிவுரையாளர் க. அருந்தாகரன் அவர்களும், ‘இலக்கியமும் கலைகளும்’ என்ற பொருளில் கலாநிதி செ. யோகராசா அவர்களும், ‘இலக்கியமும் அரசியலும்’ என்ற பொருளில் விரிவுரையாளர் பா. அகிலன் அவர்களும் ஆய்வுரைகளை நிகழ்த்தவுள்ளனர்.

பி.ப 2.30 மணிக்கு இடம்பெறும் ‘தா. இராமலிங்கம்’ அரங்கின் நிகழ்வுகளுக்கு வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் திருமதி என். சிறீதேவி தலைமை வகிக்கிறார். பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரச அதிபர் திரு க. கணேஷ் அவர்கள் கலந்து கொள்கிறார். கெளரவ விருந்தினர்களாக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு செயலாளர் திரு இ. இளங்கோவன் அவர்கள் கலந்து கொள்கிறார்.

அன்றைய மாலை நிகழ்வுகளில் மீனவ நடனம், பாம்பு நடனம், வள்ளி திருமணம் (இசைநாடகம்), கிராமியக் கதம்பம், யார் குழந்தை (நாட்டுக்கூத்து), என்பன இடம்பெறவுள்ளன.

இரண்டாம் நாள்
9ஆம் திகதி காலை 9.00 மணிக்கு ‘கவிஞர் முருகையன்’ அரங்கில் நிகழும் ஆய்வரங்கிற்கு பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்கள் தலைமை வகிக்கிறார்.

‘இலக்கியமும் மொழியும்’ என்ற பொருளில் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களும், ‘இலக்கியமும் பண்பாடும்’ என்ற பொருளில் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும், ‘இலக்கியமும் வரலாறும்’ என்ற பொருளில் பேராசிரியர் எஸ். புஸ்பரட்ணம் அவர்களும் ஆய்வுரைகளை நிகழ்த்தவுள்ளனர். ஆய்வரங்கின் இறுதியில் கருத்தாடலும் இடம்பெறவுள்ளது.

பி. ப 2.30 மணிக்கு இடம்பெறும் ‘சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி’ அரங்கின் நிகழ்வுகளுக்கு யாழ் மாவட்ட அரச அதிபர் திரு க. கணேஷ் அவர்கள் தலைமை வகிக்கிறார். பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் அவர்கள் கலந்து கொள்கிறார். சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்வித் திணைக்கள மாகாண கல்விப் பணிப்பாளர் திரு வி. இராசையா அவர்கள் கலந்து கொள்கிறார்.

அன்றைய மாலை நிகழ்வுகளில் இசைக்கச்சேரி, கிராமிய பண்பாட்டுக் கதம்பம், குழுநடனம், சத்தியவான் சாவித்திரி (இசைநாடகம்), உழவர் நடனம், சங்கிலியன் (நாட்டுக்கூத்து) என்பன இடம்பெறவுள்ளன.

மூன்றாம் நாள்
10 ஆம் திகதி பி. ப 1.30 மணிக்கு இடம்பெறவுள்ள ‘செ. இராசநாயகம் முதலியார்’ அரங்கிற்கு வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு செயலாளர் திரு இ. இளங்கோவன் அவர்கள் தலைமை வகிக்கிறார். பிரதம விருந்தினராக வடமாகாண கெளரவ ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி அவர்கள் கலந்து கொள்கிறார். கெளரவ விருந்தினர்களாக வடமாகாண பிரதம செயலாளர் திரு ஆ. சிவசுவாமி அவர்களும், யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் திரு. க. கணேஷ் அவர்களும் கலந்து கொள்கின்றனர்.

1.30 மணிக்கு இடம்பெறவுள்ள பண்பாட்டுப் பேரணியில் தமிழ் இன்னியம், வேடப்புனைவு,விருந்தினர் வரவேற்பு, பாரம்பரிய கலை நிகழ்வுகள், தமிழ் அன்னை வரவேற்பு என்பன இடம்பெறும். தொடர்ந்து தாண்டவம், தொல் சுப வாத்திய பிருந்தா, ஆகியனவும் 2007,2008 சிறந்த நூல் தேர்விற்கான பரிசில் வழங்கல், மற்றும் 2008,2009 கெளரவ ஆளுநர் விருது வழங்கல் ஆகியனவும் இடம்பெறவுள்ளன.

சு. குணேஸ்வரன்

Friday, October 2, 2009

பதிவு - 3


சு. குணேஸ்வரன்


கவிஞர் . முருகையன் நினைவு விழா


அகில இலங்கை இளங்கோ கழகத்தினர் கடந்த 29.08.2009 அன்று கவிஞர் இ. முருகையன் நினைவு விழா ஒன்றினை ஏற்பாடு செய்தனர்.

புற்றளை மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்விற்கு அமைப்பாளர் பரா.ரதீஸ் தலைமை தாங்கினார். வரவேற்புரையை ம. பகீரதனும், தொடக்கவுரையை ச. உருத்திரேஸ்வரனும் நிகழ்த்தினர்.

நினைவுரைகள் இடம்பெற்றன. ‘ஈழத்து தமிழ் நாடக வரலாற்றில் முருகையன்’ என்னும் தலைப்பில் சாவகச்சேரி றிபேக் கல்லூரி ஆசிரியர் த. மார்க்கண்டு அவர்களும், ‘முருகையன் கவிதைகள் ஒரு நோக்கு’ என்ற தலைப்பில் தாயகம் சஞ்சிகை ஆசிரியர் க. தணிகாசலம் அவர்களும், ‘மொழிபெயர்ப்பும் முருகையனும்’ என்னும் தலைப்பில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆ. கந்தையா அவர்களும், ‘முருகையன் என்றொரு மானிடன்’ என்ற தலைப்பில் கவிஞர் கொற்றை பி. கிருஸ்ணானந்தன் அவர்களும், ‘எனது பார்வையில் முருகையன்’ என்ற தலைப்பில் த. கதிர்காமநாதன் அவர்களும் உரை நிகழ்த்தினர்.

கவிஞர் கல்வயல் வே. குமாரசாமி தலைமையில் ‘முருகையனின் அடிதொட்டு’ என்ற மகுடத்தில் கவியரங்கம் இடம்பெற்றது. வேல். நந்தகுமார், பெரிய ஐங்கரன், சிவ.முகுந்தன், பரா.ரமேஸ், க. வாணிமுகுந்தன், தி. கார்த்திகேயன் ஆகியோர் கவியரங்கில் பங்குபற்றினர்.

நன்றியுரையினை கோ. கோகிலரதன் நிகழ்த்தினார்.கல்விசார் கலந்துரையாடல் - பா. தனபாலன்

அவை இலக்கிய அமைப்பின் ஏற்பாட்டில் கல்விசார் கலந்துரையாடல் ஒன்று 30.08.2009 அன்று இடம்பெற்றது. நிகழ்வுக்கு மூத்த எழுத்தாளர் தெணியான் தலைமை தாங்கினார்.

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் திரு பா. தனபாலன் கலந்து கொண்டு ‘சமகாலத்தில் பெற்றோர் பிள்ளைகள் முரண்பாடுகளைக் கையாளல்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

உரையில் தனபாலன் பயனுள்ள பல தகவல்களைத் தெரிவித்தார். சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்களை தரவுகளுடன் முன்வைத்தார்.

இந்நிகழ்வில் நாடகத்துறைக்கான கலாபூஷணம் விருது பெற்ற திரு வைரமுத்து கந்தசாமி அவர்களுக்கான கெளரவிப்பும் இடம்பெற்றது. அவர் பற்றிய உரையினை அதிபர் செ. சதானந்தன் நிகழ்த்தினார்.


பாட்டுத் திறத்தாலேநூல் வெளியீடு
கலாநிதி
த. கலாமணியின் ‘பாட்டுத் திறத்தாலே’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு 02.09.2009 யா/தேவரையாளி இந்துக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் தெணியான் தலைமை வகித்தார்.
நூல் வெளியீட்டுரையினை கவிஞர் கொற்றை பி. கிருஸ்ணானந்தன் நிகழ்த்தினார். முதன்மைப் பிரதியை சாவகச்சேரி பிரதேச சபைச் செயலர் திரு வே. சிவராஜலிங்கம் பெற்றுக் கொண்டார்.

நூல் மதிப்பீட்டுரைகளை சி. ரமேஷ், இயல்வாணன் ஆகியோர் நிகழ்த்தினர். கதைகரு, கதைக்காலம் என்பவற்றை மையமாக வைத்து ரமேஷ் தனது உரையினை நிகழ்த்தினார். இயல்வாணன் கதைகளின் அழகியலை எடுத்துக் காட்டிப் பேசினார்.

ஏற்புரையினை கலாநிதி த. கலாமணி நிகழ்த்தினார். நிகழ்வுக்கு எழுத்தாளர்களும், ஆர்வலர்களும், நூலாசிரியரின் மாணவர்களும் என அதிகமானோர் கலந்து கொண்டமை நிறைவைத் தந்தது.புலம்பெயர் கவிதைகள்உரை - அறிவோர் கூடல்

பருத்தித்துறை அறிவோர் கூடலின் மாதாந்த நிகழ்வு கடந்த மாதம் 06.09.2009 ஞாயிறு மாலை இடம்பெற்றது. அறிவோர் கூடல் ஒழுங்கமைப்பாளர்
து. குலசிங்கம் தொடக்கவுரையை நிகழ்த்தினார். மறைந்த கவிஞர்கள் ராஜமார்த்தண்டன், இ. முருகையன் ஆகியோரின் கவிதைப் பங்களிப்பை மீட்டிப் பேசினார். தொடர்ந்து ஒரு படைப்பாளிக்கு தன் கருத்தைச் சொல்லும், எழுதும் சுதந்திரம் முக்கியமானது என்றார்.

நிகழ்வில் சு. குணேஸ்வரன் ‘புலம்பெயர் கவிதைகள்’ பற்றிப் பேசினார். அவர் தனது உரையில் புலம்பெயர்ந்தவர்களின் ஆரம்பகாலக் கவிதைகள், மற்றும் கவிதைப் போக்குப் பற்றியும் எடுத்துரைத்தார். கவிதைகளின் உள்ளடக்கத்தை தாயக நினைவு, தொழில்தளம் மற்றும் நிர்வாக நெருக்கடிகள், அகதிநிலை, புதிய அனுபவம், அரசியல் விமர்சனம், அனைத்துலக நோக்கு, பெண்ணிலை நோக்கு என்றவாறு பகுத்து; தனது உரையினை நிகழ்த்தினார்.

நிகழ்வின் இறுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பலரும் ஆர்வத்துடன் பங்கெடுத்தனர். நன்றியுரையை சீனா உதயகுமார் நிகழ்த்தினார்.புதிய நிலா’ - கட்டிடத் திறப்பும் மலர் வெளியீடும்
கரவெட்டியிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘புதிய நிலா’ என்ற இளையோர் சஞ்சிகையினர் தமது செயற்பாட்டைப் பரவலாக்கும் நோக்குடன் புதிய கட்டிடம் ஒன்றினை கடந்த 20.09.2009 அன்று திறந்து வைத்தனர். இந்நிகழ்வின்போது மலர் ஒன்றினையும் வெளியிட்டனர்.

மேற்படி நிகழ்வு புதிய நிலா சஞ்சிகையின் ஆலோசனை ஆசிரியர் வேல் நந்தகுமார் தலைமையில் இடம்பெற்றது. பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ சிரேஷ்ட விரிவுரையாளர் ஆ. சுப்பிரமணியம் கலந்து கொண்டார், சிறப்பு விருந்தினர்களாக கட்டைவேலி நெல்லியடி ப. நோ. கூ. சங்க தலைவர் சி. சிதம்பரநாதன், மற்றும் கரவெட்டிப் பிரதேச கலாசார உத்தியோகத்தர் செல்வி க. செல்வ சுகுணா, அகில இலங்கை கலை இலக்கிய சங்கத்தலைவர் பொன். சுகந்தன், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் திரு கே. பாஸ்கரன், அருட்சகோதரி சிறிய புஷ்பம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட்ட புதிய நிலா சிறப்பு மலரின் மதிப்பீட்டுரைகளை சு. குணேஸ்வரன், எழுத்தாளர் குப்பிளான் ஐ. சண்முகன் ஆகியோர் நிகழ்த்தினர்.

மாணவர்களை இலக்காகக் கொண்டு நடாத்தப்படும் புதிய நிலா வின் செயற்பாடுகளை கலை இலக்கியத்தின்பால் நாட்டம் கொண்டவர்களும் முன்னெடுத்துச் செல்லவேண்டியது அவசியமாகும்.

ஏற்புரையை சஞ்சிகை ஆசிரியர் கு. அஜித்குமார் நிகழ்த்தினார்.
எனது எழுத்துகளும் இன்றைய எழுத்துகளும்’ - ‘அவைஇலக்கியச் சந்திப்பு

கலாநிதி த. கலாமணி அவர்களின் ஒழுங்கமைப்பிலான மாதாந்த அவை இலக்கிய ஒன்று கூடல் 26.09.2009 சனிக்கிழமை இடம்பெற்றது. நிகழ்வுக்கு எழுத்தாளர் தெணியான் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் சாகித்திய ரத்னா கலாநிதி க. குணராசா (செங்கை ஆழியான்) கலந்து கொண்டு ‘எனது எழுத்துகளும் இன்றைய எழுத்துகளும்’ என்ற பொருளில் உரை நிகழ்த்தினார்.

தனது எழுத்தனுபவம் பற்றி உரையாற்றிய செங்கை ஆழியான் தற்போது எழுதிவரும் இளைய தலைமுறையினரின் சிறுகதைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் கலந்துரையாடலில் பங்கெடுத்தனர்.
நிகழ்வில் இடம்பெற்ற கலந்துரையாடலில் போர்க்கால இலக்கியங்களின் பெறுமானம் என்ன? என்பது தொடர்பான வினாக்கள் எழுப்பப்பட்டன. கருத்துக்களை பலரும் தத்தம் நிலையில் நின்று முன்வைத்தனர். ஆனால் செங்கை ஆழியான் மிக நிதானமாக பல வினாக்களுக்கு விடையளித்தமை முக்கியமாகும்.

இறுதியாக கலாநிதி த. கலாமணி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

Thursday, August 27, 2009

பதிவு - 2 யாழ்ப்பாணத்து அண்மைக்கால இலக்கிய நிகழ்வுகள்


தொகுப்பு :- சு. குணேஸ்வரன்

நிகழ்வு – 1

தொலையும் பொக்கிஷங்கள் நூல் வெளியீடு


இலக்கியம் என்றால் என்ன என்பதை அறியாத அப்பாவித்தனம் நிறைந்த எழுத்தாளர்கள் தற்போது இலக்கியத்தை ஆக்கி வருகிறார்கள். இவ்வாறு தெரி வித்தார் எழுத்தாளர் தெணியான்.

வதிரி இராஜேஸ்கண்ணனின் ‘தொலையும் பொக்கிஷங்கள்’ சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா யா/தேவரையாளி இந்துக்கல்லூரியில் 11.07.2009 அன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கி நடத்திய தெணியான் மேற்கண்டவாறு தெரி வித்தார். சமூகப் பயனற்ற வகையில் எழுதுவதை எழுத்தாளர்கள் தவிர்க்க வேண்டும். சமூகவியல் பார்வையுடைய எழுத்துக்கள் வெளிவரவேண்டும். என்ற ஆதங்கத்தையும் அவர் தெரிவித்தார்.

சமூகவியல் பார்வைகளுடன் சமுகத்திற்கு பயனளிக்கும் வகையில் இராஜேஸ்கண்ணனின் ஆக்கங்கள் அமைந்துள்ளன எனவும் தெணியான் குறிப்பிட்டார்.

நிகழ்வில் மங்கள விளக்கினை தேவரையாளி இந்துக்கல்லூரி அதிபர் ம. நவநீதமணி, வைத்தியர் கமலநாதன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

வெளியீட்டுரையினையும் அறிமுகவுரையினையும் யாழ் பல்கலைக்கழக கல்வியியற்றுறை விரிவுரையாளர் கலாநிதி த. கலாமணி அவர்கள் நிகழ்த்தினார். சமூக யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு தனது ஆக்கங்களைத் தரும் இராஜேஸ்கண்ணன் உச்சங்களைத் தொட வேண்டும் என்ற கருத்தினையும் அவர் முன்வைத்தார்.

நூலின் மதிப்புரையை அம்பன் அ.மி.த.க பாடசாலை ஆசிரியர் சு. குணேஸ்வரன் தேவரையாளி இந்துக்கல்லூரி ஆசிரியர் வேல். நந்தன் ஆகியோர் நிகழ்த்தினர்.

கதைகளின் காலம், கதைக்கரு, மொழி, களம், உரையாடற்பாங்கு, சித்திரிப்பு, என்ற வகையில் ஆய்வுரையை நிகழ்த்திய குணேஸ்வரன், நவீன சிறுகதையின் எல்லைகளைத் தொடுகின்ற வகையில் தனது களத்தையும் கதைகளையும் உத்திகளையும் இராஜேஸ்கண்ணன் விரிவுபடுத்த வேண்டும் என்று கருத்தை முன்வைத்தார்.

வேல் நந்தன் தனது உரையில், கதைக்குள் நின்று கதையை நகர்த்திச் செல்லும் வகையை எடுத்துக் கூறி சமூகவியற் பார்வைக்குள் நின்று எழுதுகின்ற அவரின் தன்மையை எடுத்துக் காட்டிகோட்பாடுகளுக்குள் படைப்பாளியை அடக்காமல் அவரை அவராகவே விட்டுவிடுங்கள் என்றும் கூறினார். இராஜேஸ்கண்ணனின் ஏற்புரையோடு நிகழ்வு நிறைவு பெற்றது.
-பூ. நகுலன்


நிகழ்வு – 2

பருத்தித்துறை அறிவோர் கூடல்

பருத்தித்துறை அறிவோர் கூடல் இலக்கியச் சந்திப்பின் மாதாந்த நிகழ்வு யூலை 5 ஆம் திகதி இடம்பெற்றது. திரு து. குலசிங்கம் அவர்களின் தொடக்க உரையோடு நிகழ்வு ஆரம்பமாகியது. சு. குணேஸ்வரன் ‘புலம்பெயர் இலக்கியம் - வரலாறும் வகைப்பாடும்’ என்ற பொருளில் தனது உரையினை நிகழ்த்தினார்.

புலம்பெயர் இலக்கியம் என்ற சொற்பிரயோகம்> உலகில் புலம்பெயர் வரலாறு> தமிழ் நாட்டு புலம்பெயர் வரலாறு> ஈழத்தமிழன் புலம்பெயர்வு> புலம்பெயர்ந்த சமூகம்> அவர்கள் எதிர்கொள்கின்ற சிக்கல்கள் என்றவாறு தனது உரையை நிகழ்த்தினார்.

ஈழத்தமிழரின் புலம்பெயர் 1960 களில் இருந்து நிகழ்ந்தாலும் 1980 களின் பின்னரான புலம்பெயர்வே ‘புலம்பெயர் இலக்கியம்’ (DIASPORA LITERATURE) என்ற சொற்றொடருக்கு மிகுந்த அர்த்தத்தைக் கொடுத்ததாகவும்> இன்று புலம்பெயர்ந்து தமது படைப்புக்களை படைத்து வரும் ஷோபாசக்தி> திருமாவளவன்> சுகன்> பார்த்திபன் போன்றோரின் படைப்புக்கள் ‘புகலிட இலக்கியம்’ (EXIL LITERATURE ) என்ற வகைப்பாட்டுக்குள் கொள்ளத்தக்கவை என்ற கருத்தினை முன்வைத்தார். புகலிட இலக்கியம் என்பது அரசியல் அழுத்தம் கூடிய சொற்றொடராகவே இருப்பதாகவும் குறி;ப்பிட்டார்.

இந்த உரையை தொடர்ந்து நான்கு அமர்வுகளில் நிகழ்த்தப் போவதாகவும் உரையாளர் தெரிவித்தார். படைப்பாளிகள்> ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் நன்றியுரையை எழுத்தாளர் இராகவன் நிகழ்த்தினார்.


நிகழ்வு – 3

ஞானம் ஞானசேகரனின் இலக்கியச் சந்திப்பு

ஞானம் ஞானசேகரனின் இலக்கியச் சந்திப்பு ஒன்று கடந்த யூலை மாதம் ‘அவை’ இலக்கிய அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.


எழுத்தாளர் தெணியான் தலையையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஞானசேகரன் ‘அண்மைக்கால இலக்கியப் போக்கு’ என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் 1980 களின் பின்னர் வெளிவந்த பல படைப்புகளை எடுத்துக் காட்டிப் பேசினார். கவிதைகள்> கதைகள்> ஆகியன பற்றிப் பேசும்போது ஞானத்தில் வெளிவந்த ஆக்கங்களை மையப்படுத்தியே தனது உரையை நிகழ்த்தியமையால் சில வாதப்பிரதி வாதங்களும் இடம்பெற்றன.

தெணியான் அவர்கள் தனது கருத்தினைத் தொpவிக்கும்போது ஞானத்தில் வந்த படைப்புக்கள் மட்டும்தான் தற்கால இலக்கியப்போக்கைத் தீர்மானிப்பவையல்ல என்ற கருத்தினையும் சுட்டிக்காட்டினார்.

நிகழ்வில் கல்வயல் வே. குமாரசாமி> கலாநிதி த. கலாமணி> கொற்றை பி. கிருஸ்ணானந்தன்> சின்னராஜன்> அஜந்தகுமார்> இராஜேஸ்கண்ணன்> துவாரகன்> வேல் நந்தகுமார்> ஆகியோர் உட்பட 50 ற்கும் மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.


நிகழ்வு – 4
ஞானசேகரனின் உரை

துன்னாலை வடிவேலர் மண்டபத்தில் ஞானசேகரனின் நாவல் பற்றிய உரை இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பொன். சுகந்தன் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் அறிமுகவுரையை த. அஜந்தகுமார் நிகழ்த்தினார். உரையை ஞானசேகரன் நிகழ்த்தினார்.

தமிழ் நாவலின் போக்கு அதன் வளர்ச்சி பற்றி உரை நிகழ்த்தினார். நிகழ்வுக்கு உயர்தர மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


நிகழ்வு – 5

அன்புடை நெஞ்சம் வெளியீட்டு விழா


நெல்லை லதாங்கியின் ‘அன்புடை நெஞ்சம்’ என்ற குறுநாவலின் வெளியீட்டு விழா அண்மையில் நெல்லியடி பிரதேச சபை மண்டபத்தில் எழுத்தாளர் தெணியான் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரமத விருந்தினராக ஆறு திருமுருகனும்> சிறப்பு விருந்தினராக கரவெட்டி பிரதேச செயலாளர் எஸ். சத்தியசீலனும் கலந்து கொண்டனர். அறிமுகவுரையை விக்கினேஸ்வராக் கல்லூரி அதிபர் திரு சிவசிதம்பரம் நிகழ்த்தினார்.

நூல் மதிப்புரையை யாழ் பல்கலைக்கழக கல்வியியற்றுறை விரிவுரையாளர் திருமதி இராசநாயகம்> மற்றும் ஆசிரியர் திரு சு. குணேஸ்வரன் ஆகியோர் நிகழ்த்தினர்.


நிகழ்வு – 6

இலக்கியச் சந்திப்பு

ஞானம் ஞானசேகரனுடான இலக்கியச் சந்திப்பு ஒன்று கடந்த 16.08.2009 அன்று எழுத்தாளர் ராஜசிறீக்காந்தனின் பிறந்தகமான யாவத்தை அல்வாய் தெற்கில் கவிஞர் வதிரி கண எதிர்வீரசிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் நிகழ்வு இடம்பெற்றது.


க. சி;ன்னராஜன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வரவேற்புரையை வேல் நந்தன் நிகழ்த்தினார். ‘படைப்பாக்க அனுபவப் பகிர்வு’ என்ற பொருளில் ஞானசேகரன் உரை நிகழ்த்தினார். தனது நாவல்கள் சிறுகதைகள் ஆகியவற்றின் படைப்புநிலையில் தான் எதிர்கொண்ட அனுபவங்களையும் இதழியல் அனுபவங்களையும் எடுத்துக் கூறினார்.

நிகழ்வில் பல படைப்பாளிகளும் ஆர்வலர்களும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

நிகழ்வு – 7
இலக்கிய ஒன்றுகூடல்


அகில இலங்கை கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கிய ஒன்று கூடல் கடந்த 17.08.2009 அன்று நெல்லியடி தடங்கன் புளியடி முருகமூர்த்தி ஆலய மண்டபத்தில் சங்கத் தலைவர் பொன் சுகந்தன் தலைமையில் இடம்பெற்றது.

‘கிழக்குப் பிரதேசத்தின் அண்மைக்கால இலக்கியச் செல்நெறி’ என்னும் பொருளில் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி செ. யோகராசா அவர்கள் உரை நிகழ்த்தினார். நிகழ்வின் தொடக்கவுரையை சு. குணேஸ்வரன் நிகழ்த்தினார்.

கலாநிதி செ.யோகராசா தனது உரையில் 90 களுக்குப் பின்னர் கிழக்கின் மட்டக்களப்பு> அம்பாறை> திருகோணமலை பிரதேசத்தின் இலக்கியப்போக்கினை மிக விரிவாக எடுத்துரைத்தார். கவிதை> சிறுகதை> நாவல்> புனைவுசாரா இலக்கியங்கள்> சஞ்சிகை மற்றும் சிறுவர் இலக்கியப் போக்கு ஆகியன பற்றி உரை நிகழ்த்தினார்.

நிகழ்வில் எழுத்தாளர் தெணியான்> குப்பிளான் ஐ. சண்முகன்> கலாநிதி த.கலாமணி> செ. சுதர்சன்> இராஜேஸ்கண்ணன் ,அஜந்தகுமார்> இராகவன்> இ.சு முரளீதரன்> பா. இரகுபரன் உட்பட 50 வரையான படைப்பாளிகளும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். மிகக் கனதியாகவும் காத்திரமாகவும் நடைபெற்ற நிகழ்வின் இறுதியில் கலந்துரையாடலும் இடம்பெற்றது.

Thursday, August 13, 2009

பதிவு - 1 அறிவோர் கூடல் நிகழ்வு


சு. குணேஸ்வரன்

இலங்கை யாழ்ப்பாணம் பருத்தித்துறை து. குலசிங்கம் அவர்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் அறிவோர் கூடல் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நடைபெற்றது. இதன் நான்காவது நிகழ்வு 01.03.2009 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் துவாரகனின் 'மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்' என்ற கவிதைத் தொகுப்புப் பற்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் இரா. இராஜேஸ்கண்ணன் விமர்சன உரையாற்றினார்.
நிகழ்வின் தொடக்கத்தில் து. குலசிங்கம் கடித இலக்கியங்களின் தோற்றம் அதன் வளர்ச்சி பற்றிய புதிய செய்தியை எடுத்துக் கூறினார். சிலப்பதிகாரத்தில் மாதவி கோவலனுக்கு எழுதிய மடல் இந்த கடித இலக்கியங்களின் தொடக்கமாக இருக்கின்றன என்றார். ஈழத்தில் கைலாசபதி - சிங்காரம் கடிதங்கள்: குலசிங்கத்தின் கடிதங்களை காலச்சுவடு பிரசுரித்ததை ஞாபகப்படுத்தினார்.
துவாரகனின் கவிதை பற்றிய உரையில் பேச்சாளர் கவிதைகளின் காலம்; அவை எடுத்துக் கொண்ட பொருள்; அவற்றின் அழகியல்; கவிதையின் மொழி பற்றிய கருத்துக்களை மிக நுட்பமாக உதாரணங்களுடன் எடுத்துக் காட்டினார். (இந்நூல் பற்றிய விமர்சனங்கள் இரண்டு திண்ணையில் வெளிவந்தது)
நிகழ்வில் நூலாசிரியர் துவாரகன்; ஓவியர் கோ. கைலாசநாதன்; எழுத்தாளர் இராகவன்; மற்றும் பா. இரகுபரன்: கந்தையா; பாலசுப்பிரமணியம்;ஆகியோருடன் பல படைப்பாளிகளும் இலக்கிய ஆர்வலர்களும் பங்குபற்றினர்.
ஈழத்தின் இறுக்கமான சூழலுக்கு மத்தியிலும் இது போன்ற நிகழ்வுகள் இடம்பெற்று வருவது ஓரளவு மனிதர்களாக வாழ்வதற்கு ஏற்ற நம்பிக்கையைத் தருவதாக நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தார்கள்.