"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."
Saturday, November 13, 2010
மறுபாதி சஞ்சிகை வெளியீடும் நூல் கண்காட்சியும்
பதிவும் படங்களும் : சு. குணேஸ்வரன்
‘மறுபாதி’ கவிதைக்கான காலாண்டிதழின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வும் தேர்ந்த நூல்களின் கண்காட்சியும் 13.11.2010 அன்று யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் BOOK LAB நிறுவனத்தினரின் தேர்ந்த நூல்களின் கண்காட்சி அன்றைய தினம் காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது.
நூல் வெளியீடு மாலை 3.00 மணிக்கு அ. கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் வெளியீட்டுரையை கலைமுகம் சஞ்சிகை பொறுப்பாசிரியர் கி. செல்மர் எமில் நிகழ்த்தினார்.
நூலை எழுத்தாளர் ஐ. சாந்தன் வெளியிட்டு வைக்க நடராசா ஆனந்தன் பெற்றுக் கொண்டார். சஞ்சிகை பற்றிய ஆய்வுரையினை எழுத்தாளர் சாந்தன் நிகழ்த்தினார். பதிலுரையை சித்தாந்தன் நிகழ்த்தினார். சி. ரமேஸ் நன்றியுரையை நிகழ்த்தினார்.
மறுபாதியின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழாக வெளிவந்துள்ள இவ்விதழ் மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்கான இதழாக மிளிர்கின்றது. இதில் பேராசிரியர் சி. சிவசேகரத்துடனான மொழிபெயர்ப்புக் கவிதைகள் பற்றி சி. ரமேஸின் நேர்காணலும், 20 ற்கு மேற்பட்ட வேற்றுமொழிப் படைப்பாளிகளின் மொழிபெயர்ப்புக் கவிதைகளும் உள்ளன.
கவிதைகளை எம். ரிஷான் செரீப், ரவிக்குமார், மு. பொன்னம்பலம், எம்.ஏ.நுஹ்மான், வி.உதயகுமார், சோ. பத்மநாதன், ந. சத்தியபாலன், பஹீமா ஜஹான், கஞ்சாக் கறுப்புக் கள்ளன், வைரமுத்து சுந்தரேசன், சு. வில்வரத்தினம், தி.நிஷாங்கன், சங்கரசெல்வி, சத்தியதாசன், இ.ரமணன், விமல் சுவாமிநாதன், சி.ஜெயசங்கர் ஆகியோர் மொழிபெயர்த்திருந்தனர்.
மகேந்திரன் திருவரங்கன், யமுனா ராஜேந்திரன், செ.யோகராசா, பா.துவாரகன், ஜெயமோகன், கருணாகரன், ந.சத்தியபாலன் ஆகியோரின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் பற்றிய கட்டுரைகளும் திவ்வியாவின் பத்தியும் உள்ளடங்கியுள்ளன.
marupaathy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு இதழைப் பெற்றுக் கொள்ளமுடியும்.
இரண்டு நிகழ்வுகளின் ஒளிப்படங்களையும் காணலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
vaazhthukkal.
ReplyDeletemullaiamuthan