"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Saturday, April 9, 2011

பருத்தித்துறை அறிவோர் கூடல்


பதிவும் படங்களும் - சு. குணேஸ்வரன்

இலக்கியச்சோலை து. குலசிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் மாதாந்தம் நடைபெற்றுவரும் அறிவோர் கூடல் நிகழ்வில் மருத்துவத்துறை சார்ந்த கலந்துரையாடல் ஒன்று கடந்த 03.04.2011 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் இரண்டு கருத்துரைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

‘கதிர்ப்புகலும் அதன் மருத்துவப் பயன்பாடும்’ என்ற பொருளில் மருத்துவப் பெளதீகவியலாளர் ஜெயசுதன் அவர்கள் உரையாற்றினார். தொடர்ந்து டாக்டர் நாகநாதன் அவர்களின் ‘எயிட்ஸ்’ பற்றிய விபரணப்படம் மற்றும் கருத்துரையும் இடம்பெற்றது.

முன்னதாக து. குலசிங்கம் அவர்களின் தொடக்கவுரையுடனும் பா.துவாரகன் அவர்களின் அறிமுகவுரையுடனும் நிகழ்வு ஆரம்பமாகியது.

ஜெ. ஜெயசுதன் அவர்கள் தனது கருத்துரையின்போது மல்ரிமீடியா உதவியுடன் விளக்கத்தை வழங்கி தனது உரையை நிகழ்த்தினார். மருத்துவத்துறையில் கதிர்வீச்சின் பயன்பாடு என்ற பிரதான விடயத்தின்கீழ் கதிர்வீச்சு, அண்மையில் ஜப்பானில் இடம்பெற்ற சுனாமியுடன் தொடர்ந்த அணுக்கசிவு ஆகியனவும்; மருத்துவத்துறையில் புற்றுநோய்ச் சிகிச்சையில், புற்றுநோய் உருவாக்கத்தின் தூண்டுதலில் பங்களிப்புச் செய்யும் உணவு தொடர்பான காரணிகள் ஆகியன தொடர்பாகவும் இன்றைய தொடர்பாடலில் பங்களிப்புச் செய்யும் கதிர்வீச்சு, அது மனிதனில் ஏற்படுத்தும் பாதிப்பு என்பன பற்றியும் பேசினார்.

அடுத்து டாக்டர் வெ. நாகநாதன் அவர்களின் “ஊடுருவும் உயிர்க்கொல்லி” என்ற ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து எயிட்ஸ் நோய்க்கொல்லி பற்றியும் இன்றைய நமது சமுதாயப்போக்குப் பற்றியும் விரிவாக விளக்கமளித்தார்.

இறுதியாக சபையோர் கலந்துரையாடலுடன் நிகழ்வு நிறைவு பெற்றது. இலக்கியம் சார்ந்த உரையாடல்களுக்கு அப்பால் மருத்துவம் சார்ந்து தெரியாத பல விடயங்களை அறிந்து கொள்ளக்கூடியதாக பயனுள்ள ஒரு சந்திப்பாக மேற்படி நிகழ்வு அமைந்திருந்தது.

டாக்டர் நாகநாதன் அவர்களின் விபரணப்படத்தினை பின்வரும் இணைப்பினூடாக பார்க்கமுடியும்.(http://www.youtube.com/watch?v=DhvkRMg-oWA&feature=player_embedded#at=13)

(டாக்டர் வெ. நாகநாதன் அவர்களின் வலைப்பதிவு http://savaale.blogspot.com/)






உரையாளர்கள்









2 comments:

  1. பகிர்வுக்கு நன்றி. சிறப்பான பயனுள்ள விடயங்கள் பேசப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete